பெறுனர்:
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி/ மகிந்த அய்யே
புலிப் பினாமிகள்
அமெரிக்க ஏகாதிபத்தியம்
ஆங்கிலேயப் பேரரசு
தோழர் கலையரசன் முதலானோர்
ரோ
மற்றும் வீ டமில்ஸ் போன்றோர்
விடயம்: கைக்கூலி எழுத்தாளர் பதவிக்கான தொழில் விண்ணப்பப் படிவமும் சுயவிபரக் கோவையும்
அய்யன்மீர்,
கடந்த பலநாட்களாக பேசுபுத்தகத்திலே பலர் பலரைப் பார்த்து “நீ அவர்களிடம் காசு வாங்கி எழுதுகிறாய்”, “நீ அதைப் பற்றி எழுதிக் காசு பார்த்தாய்” என்றெல்லாம் சொல்லக்கண்டு வியந்து போகிறேன். இந்தத் தொழில் மிகவும் சுலபமானதாகவும், பெரும் பணம் கொழிப்பதாகவுமிருக்கவேண்டும் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் எண்ணுக்கணக்கற்றவர்கள் இத்தொழிலைச் செய்யபாட்டார்களல்லவா? ஆகவேதான் இத்தொழிலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றிருக்கிறேன்.
எனக்குரிய தகமைகளைப் பட்டியலிடுவதன் மூலம் இத்தொழிலுக்கு நான் எவ்வளவு தகமையானவர் என்பதை உங்களுக்கு நிரூபிக்கமுடியும். அய்யா, என்னால் எலுத்துப் பிளைகழ் இல்லாமள் தமிழை எளுதமுடியும். எனக்கு நிறையத் தூசண வார்த்தைகள் தெரியும். துன்னாலை அக்கவுண்டண்ட் அவர்களின் பிரதான மாணாக்கனான எஞ்சினியர் கஜேந்திரன் அவர்களுடன் ஒரே வகுப்பில் படித்தவன் நான். மேலும், கருணையம்பதி முத்துவேலுப் பண்டிதர் அவர்கள் தமிழ் வகுப்பெடுத்த தனியார் கல்வி நிலையங்களில் படித்திருக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல், பண்டிதர் அவர்களால் செல்லமாக விளிக்கப்பட்ட மயூரன் என் மாமி மகன், சுதாகரன் என் உயிர் நண்பன். மேலும், கலையரசன். த, வினவு தளம், யுவக்கிருஷ்ணா போன்ற ஜாம்பவான்களோடு மட்டுமில்லாமல், எத்தனையோ பல பேசுபுக்கு எழுத்தாளர்களையும் புரட்சியாளர்களையும் கரைத்துக்குடித்திருக்கிறேன். மேலும், பிரக்ஞையின் ஓருருவானவரிடமிருந்து எத்தனையோ கடிதங்களையும் பெற்ற பாக்கியவான்(ர்) நான். இவை யாவும் என் மொழிப்புலமைக்குச் சான்றுகள்.
மேலும், யாரைவாவது பிடிக்கவில்லை என்றால் அருமையான கட்டுக்கதைகளை எழுதுகிற வல்லமை என்னிடமுண்டு. என்னால் வகைதொகையன்றி அவதூறு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடலாம், ஆனால் விண்ணப்பக்கடிதம் இரண்டு பக்கங்களுக்குள் இருக்கவேண்டும் என்பதால் அதை என்னுள்ளேயே பொத்தி வைத்துக்கொள்கிறேன். இந்தத் தொழிலுக்கு என்னைவிடச் சிறந்த ஒரு விண்ணப்பதாரி உங்களுக்குக் கிட்டமாட்டார்.
அய்யன்மீர், ஃபக்டரிகளிலும், உணவுச்சாலைகளிலும் வேலைசெய்து முதுகெலும்பு கூனிப்போய்விட்டது முப்பது வயசுக்குள். நன்றாக உண்டு உடுத்து அலைந்து கழிந்து வாழ எனக்கும் என் துணைக்கும் வழிசெய்யவேண்டும் நீவிர். தயைகூர்ந்து இந்தத் தொழில் விண்ணப்பபடிவத்தை ஏற்றுக்கொண்டு மேற்படி பதவியை எனக்குத் தந்தால் உங்கள் காலில் செருப்பாயும், உங்களைவிடக் கூடுதலாய் யாரும் சம்பளம் தந்தால், உங்களுக்கு நெருப்பாயும் இருப்பேன் என்று இத்தாற் தெரிவித்துக்கொள்கிறேன்.
பின்னிணைப்பு: சுயவிபரக்கோவை
நோக்கம்: கைக்கூலி எழுத்தாளர் பதவியைப் பெற்றுக்கொள்ளல்
தகமைகள்:
+தொழில்முறை வசைபாடி
+படியளப்பவர்கே விசுவாசி
+பிலையின்றி தமிழ் எளுதுவேன்
+நன்றாக தூஷணம் பேசுவேன்
+கலை சொல் தெரியும்
+அனுபவப் புனைவு என்று சேறடிப்பேன்
மேலதிக தகமைகள்
+பேசுபுக், டுவிட்டரில் உள்ளேன் (ஐந்தாறு போலிக் கணக்குமுண்டு)
+வட்ஸ்சப் கிசுகிசுக்கள், வீடியோக்கள் கைவசமுண்டு
தொழில் அனுபவம்
+வலைப்பதிவாளர் (2008-2012)
+டுவீட்டர் (2011-அவ்வப்போது)
+பேசுபுக்கர் (2009- சாகும்வரை)
கல்வி
+பண்டிதர் முத்துவேலு நெல்லுக்கிறைத்த நீர்
+நண்பர்கள்
+கஜேந்திரனின் அனாமதேய தொலைபேசிக்கான பதில்
+மற்றும் பல ஊர்ப் பெரியவர்களின் கூட்டு
நன்றியும் அன்பும்