சம்பவம்
கி.பி. 2016 வைகாசி மாதம் நடுப்பகுதியிலே, மேப்பிள்காட்டின் பெரிய முகத்துவாரம் நகரின் வீடொன்றின் நிலக்கீழறையிலே, எல்லாவிதமான வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட மூன்று ஆண்களின் நாடகங்களை துளிர்ப்பு நாடகப் பட்டறையின் மேடையிலேற்றி அடிமைத்தளையை உடைத்தெறிந்த புரட்சியின் வெற்றிதந்த மகிழ்ச்சியை உண்டு குடித்துக் கொண்டாடிக்கொண்டும், “எனக்கு இருபத்து மூன்று துணைகள், யாவருமே அவர்களாக என்னிடம் வந்தவர்கள்” என்கிற gigoloக்களின் பிரதிநிதி ஒருவரின் உணர்ச்சிமிகு வாக்குமூலத்தைப் பற்றிக் கண்ணீர்மல்க விவாதித்துக்கொண்டும், “அந்தப் பழைய எழுத்துப் பொடியனோட இருக்கிற பெட்டை சிங்களத்தியா இல்லையா” என்ற பயன்மிகு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்த வாமுபேபி அமைப்பினரின் நாளை நரகமாக்கவென்றே ஒரு சம்பவம் நிகழ்ந்துபோயிற்று. அச்சம்பவத்தின் காரணகாரியங்களை அறிவதற்கென அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழுவின் பேசவல்ல அதிகாரியான கூனாகீனா அவர்கள் சேகரித்த சில வாக்குமூலங்கள் சுருக்கப்பட்ட வடிவில் வருமாறு.
பி.கு: வாமுபேபி குழுமம் கூடுகிற கூட்டங்கள் குயின்ஸ்ரன் டொரண்டீனோ எழுதி இயக்கிய “குட்டையோர நாய்கள்” திரைப்படத்தின் முதற்காட்சிபோல இருக்கும் என நீங்கள் எதிர்பார்த்திருந்து ஏமாந்தால் அதற்கு நீங்கள் குயின்ஸ்ரனையோ, நாய்களையோ திட்டக்கூடாது.
சுவீடன் சுருளி சாப்பிட்ட பருத்தித்துறை வடை– ஆயிரம்பெயருடைய நடால்
இந்தச் சம்பவத்துக்குக் காரணம் சுவீடன் சுருளி என்பது எனக்கு சந்தேகத்துக்கிடமின்றித்தெரியும். அவர்தான் என்னை இங்கே தனது வாகனத்தில் அழைத்துவந்தார். அதற்கு எனக்கு வாகனமோட்டத் தெரியாததுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். இந்த இடத்தில், எனக்கு வாகனமோட்டத் தெரியாது என்று குத்திக்காட்டும்பொருட்டு சுவீடன் சுருளி இதைச் செய்திருக்கலாம் என்றும் நான் நினைக்கிறேன். அப்படி அவர் குத்திக்காட்டுவதைப் பொறுக்கமுடியாமற்தான் நான் இந்தச் சம்பவத்துக்கு சுவீடன் சுருளிமீது பழியைப்போடுகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்களாயின் இந்த வாக்குமூலத்தை நான் மீண்டும் ஆரம்பிக்கவேண்டிவரும். ஆகையால் அப்படியான சந்தேகம் ஏதும் வராமல் உங்கள் மனதைப் பண்படுத்திக்கொள்ளவும். நான் சுவீடன் சுருளியின் வாகனத்தில் ஏறியபோது அவரது வாகனத்திலிருக்கிற இறுவெட்டு விளையாடியிலிருந்து புதுமையான நடனமாடவைக்கிற இசை கசிந்துகொண்டிருந்தது. இசை கசிந்தால் வாகனம் ஈரமாகிவிடாதா என்கிற மிகப்பழைய நகைச்சுவையை நீங்கள் உங்கள் மனதுக்குள் ஓட்டிப்பார்ப்பீர்களானால் உங்களை ஆயிரம் திரை பாரா மீ வந்தாலும் திருத்தமுடியாது. ஒரு கையால் வாகனத்தைச் செலுத்தியவாறு மறுகையால் ஒரு பைக்குள் இருந்து எதையோ எடுத்து சுவீடன் சுருளி சாப்பிட்டிக்கொண்டிருந்தார். அது என்னவென்று நான் அவரைக்கேட்க, அவர் என்னவோ சொன்னார். அவர் தின்றுகொண்டிருந்த பதார்த்தத்தால் நிரம்பியிருந்த அவரது வாயிலிருந்து சொற்களுக்குப்பதிலாக எச்சிலிலூறிய உடைந்த உழுந்துத்துகள் ஒன்று என் முகத்தில் வந்து விழுந்தது. ஆகவே, அது உழுந்தினாலான பதார்த்தம் என்பது எனக்கு விளங்கிற்று. அவர் கையிலிருந்த பையைப் பிடுங்கி, அதிலொட்டப்பட்டிருந்த சிட்டையை வாசித்தேன். அதிலிருந்த விபரங்கள் பின்வருமாறு:
பருத்தித்துறை வடை
தயாரிப்பாளர்: ராஜா சுவைச்சோலை
உற்பத்தித்தேதி: 15.06.2015
முடிவுத்தேதி: 15.07.2015
உள்ளடக்கம்: கோதுமை மா, உழுந்து, வற்றல் மிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, உப்பு
நீங்களே பாருங்கள் கூனாகீனா, உழுந்தை அடிப்படையாகக் கொண்ட, முடிவுத்திகதி முடிந்து 8 மாதங்களான பருத்தித்துறை வடையை, எனக்கு ஒரு சின்னத்துண்டும்தராமற் தின்றுமுடித்திருக்கிறார் சுவீடன் சுருளி. ஆகையினாற்றான் இச்சம்பவத்துக்கு அவரே காரணமாயிருக்கவேண்டும் என்பது என்னுடைய முடிந்த முடிவாகும்.
புல்லட் சத்துருக்கன் சாப்பிட்ட பொரித்த மீன்- சுவீடன் சுருளி
சத்துருக்கனுக்கு வயது போய்விட்டது, ஆனால் கோபமும் ஞாபகங்களும் மங்கவில்லை. சத்துருக்கன் முன்பொருகாலத்தில் இலண்டனிலிருந்து படிப்பைவிட்டுவிட்டுத் திரும்பிப்போய் புல்லட் ஓட்டியவன். ஆயுதம் தூக்கிப் போராடதவனெல்லாம் யுத்தம் பற்றிப் பேசக்கூடாது என்ற உயர்ந்த கொள்கை உடையவன். என்னைக்கூட ஒருமுறை கொடூரமாகக் கொல்லவேண்டும் என்கிற ஆசையை எமது மூன்றாவது ஷிவாஸ் ரீகல் முடிந்தபோது வெளிப்படுத்தியிருந்தான். பிரச்சினை என்னவென்றால், உங்களுக்கே தெரியும் “அவன் முகர்ந்து பார்த்தாலே போதையாகிவிடுவான்” என்றொரு சொலவடை உண்டு. சத்துருக்கன் குடிப்பதைப்பற்றி நினைத்தாலே போதையாகிவிடுவான். முதல் கோப்பையை முடித்ததும் அவனுக்கு நாக்குழறும். இரண்டாவது கோப்பையைத் தொட்டதுமே அவன் ஆங்கிலத்திற் பேச ஆரம்பித்துவிடுவான். அவனுக்கு சினிமா பற்றி எல்லாம் அத்துப்படி. அவனுடன் “புல்லுக்கட்டு முத்தம்மா” “யார் பெய்லினுக்கு ஆணி அடிப்பது” போன்ற படங்கள் உட்பட எல்லாவிதமான படங்களையும் ஓடியோடிப்பார்ப்பவன். அதனாற்தான் இலண்டனிலிருக்கிற ஒரு எழுத்தாளரைப் போகிற போக்கில் “காமடிப் பீசு” என்று அவனாற் சொல்லமுடிகிறது. மேலும் அவன் ஒரு பெரிய இலக்கியவாதி. சுயாத்தாவைக் கரைத்துக்குடித்தவன். அந்த நம்பிக்கையில் இரண்டு கதையெழுதினான். அவை மோசமான கதைகளில்லை… படு மோசமான கதைகள். முதற்கதைக்கு “உச்சம்” என்று தலைப்பு. “தமிழ்க்காமக்கதைகள்” இணையத்தளத்தில் இடம்பெறுவதற்கு முற்றிலும் தகுதியான கதை. அந்த மட்டமான கதையை உலகெல்லாம் போய் நல்லிலக்கியம், நல்சினிமா, நல்லிணக்கம் மற்றும் மாற்றுக்கருத்துக்காகப் போராடும், வானத்துக்குக் கீழேயிருக்கிற எதைப்பற்றியும் கருத்துச்சொல்லக்கூடிய அவனது சகோதரி கண்டுகொள்ளவேயில்லை. அவராலும் என்ன செய்யமுடியும்? விதவிதமாகச் சேலைகட்டிக்கொண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவே நேரம் சரியாகிறது. யாருமே கண்டுகொள்ளாத ஏக்கத்தில் “சாருநிவேதிதாவும் நயன் தாராவும்” என்றொரு கதையெழுதினான். கறுமம், இரண்டு புகழ்பூத்த எழுத்தாளர்கள் அந்தக் கதையைத் திறம் என்றார்கள். பாவிகள். சத்துருக்கனுக்கு அவர்கள் பாராட்டுகிறார்களா நக்கலடிக்கிறார்களா என்பது விளங்கவேயில்லை. தண்ணியடிக்க வந்துவிட்டான்.
உங்களுக்கே தெரியும், இவன் இரண்டாவது கோப்பையிலேயே ஆங்கிலம் பேசவாரம்பித்துவிடுவானென்பது. அதைத்தடுக்கவென்றுதான் இந்தக் கொண்டாட்டத்தை ஒழுங்குசெய்த பேரரசன் கதாதர் சத்துருக்கனுக்கு நிறைய பொரித்த மீன்களைக் கொடுத்தான். மாங்காய்த்தீவில் ஒரு சிறுவர் பாட்டொன்றுண்டு. “கலோ மிஸ்டர் கந்தையா, கல்லுக்கு மேல குந்தையா, பொரிச்ச மீனைத் தின்னையா, புறுக்கு புறுக்கெண்டு சம்பவம் செய்யைய்யா” என்பதாகச் சின்னப்பிள்ளைகள் பாடுவார்கள். என்னால் பாடுகிற அந்தச் சின்னப்பிள்ளைகளின்மேல் ஆணையிட்டுச் சொல்லமுடியும், இந்தச் சம்பவத்தைச் செய்தவன் பொரித்தமீனைக் கொறித்த புல்லட் சத்துருக்கனே.
திரை பாரா மீ சாப்பிட்ட அவித்த கடலை- புல்லட் சத்துருக்கன்
நான் இரண்டாவது கோப்பையிலேயே ஆங்கிலம் பேசுகிறவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனாற்றான் நிறைய மீனும் சாப்பிட்டேன் என்பதுவும் உண்மை. ஆனால், நானெல்லாம் இவர்கள் மாதிரிக் கோழையல்ல, சத்தமில்லாமற் சம்பவம் செய்வதற்கு. உங்களுக்குத் தெரியுமா? நான் தலைமையேற்று ஓட்டுவதானால் மட்டுமே புல்லட் ஓட்டுவேன் இனி, என்று உமா மகேஸ்வரனுக்குச் சூழுரைத்துவுட்டு இலண்டன் திரும்பியவன் நான். இவர்களை மாதிரி நசுக்கிடாமல் சம்பவம் செய்கிறளவுக்கு நான் தரம்தாழ்ந்து போய்விடவில்லை. “செய்கிற சம்பவம் வெளியே தெரியாதவரைக்கும் எல்லாரும் சம்பவம் செய்யாதவர்களே” என்று சுயாத்தா சொல்லியிருக்கிறார். நான் சத்தமாகச் சம்பவம் செய்பவன். பொரித்த மீன் காரணமான சம்பவங்கள் என்றுமே அவ்வாறானவையே. ஆனால், அவித்த கடலை காரணமான சம்பவங்கள் அப்படியில்லை, அவை சத்தமில்லாதவை.
கேளுங்கள் கூனாகீனா, பேரரசன் கதாதர் எவ்வளவு நல்ல உணவுகளைத் தயார் செய்திருக்கிறான் என்று. பொரித்த மீன், அவித்த முட்டை, வாட்டிய கோழி என்று விதம்விதமாகப் படைத்திருக்கிறான். இருந்தபோதும், இந்த திரை பாரா மீ மட்டும் தானே கொண்டுவந்த அவித்தகடலையைத் தின்றுகொண்டிருந்தான். என்னைப் பொறுத்தவரையில் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் நசுக்கிடாமற் கடலை தின்ற திரை பாரா மீதான்.
சம்பவம் என்பது கற்பிதமே- திரை பாரா மீ.
குனாகினா (எனக்குத் தெரியும் உங்கள் பெயர் கூனாகீனா என்று. அது எழுத்துத்தமிழ், நான் உங்களை விளிப்பது பெச்சுத்தமிழ்………………….), முதலில் நாங்கள் எல்லோரும் எம் அகம் நோக்கிப் பார்க்கக் கற்றுக்கொள்ளவேண்டும்……………………………………………… அப்படிக் கற்றுக்கொள்ளாதவரைக்கும் எல்லாம் பிரச்சினையே. இந்தப் பிரச்சினையை நான் எப்படிப் பார்க்கிறேன் என்று உங்களுக்கு விலக்கிச் சொல்கிறேன்++++++++++++
குனாகினா, ஒரு சாம்பவம் நாடக்கிரது என்றால் ________________ அதை எவ்வாறூ எதிர்கொள்வதூ என்று சமூகம் உங்களின் ஆள்மனத்தில் பதியவைத்த கரூத்தக்கங்களிலிருந்தே அதை நிங்கள் எதிர்கொல்வீர்கள்…………… இந்தச் சம்பவத்துக்கு முகம்சுளிப்பது+++++++++ அந்த சம்பவத்துக்கு சிரிப்பது— இன்னொண்டுக்கு அளுவது…………………………………. இதெல்லாம் உங்களுக்கு சமூகம் சொல்லித்தந்தது. ஒட்டுமொத்த மாணுட விடுதளைக்கு இடையூராக இருப்பது……. இப்படியாகச் சொல்லித்தரப்பட்ட நிலையில் மனிதர்கள் ப்ரக்ஞையற்று (un-parliamentary word, remove from final report- கூனாகீனா) இருப்பதேயாம்.
இந்தச் சம்பவத்துக்கு முகம் சுளிக்கச் சொல்லி உங்களைத் தூண்டுவது அந்தப் ப்ரக்ஞையற்ற நிலையேயாகும்…… இதற்கெல்லாம் ஒரே தீர்வு, நீங்கள் வீடு வாங்காமல், பிள்ளை பெறாமல், சிரிக்காமல், அழாமல், முத்தமிடாமல், அடுத்த ஜீவராசியை நேசிக்காமல் மரக்கட்டையாக இருப்பதேயாம். இப்படியிருக்கத் தெரியாமல் பலபேர் இருப்பதாலே———————— அவர்களால் சுரியனை நோக்கிப் பயணிக்க முடியது…………………………………………………………………………………. அப்படிப் பிராயானித்தாள் மட்டுமே மானிட குலம் விடுதலையாகும்++++++++
மேலும் ஒன்றைச் சொல்லவேண்டும். காவி என்பது நெருப்பின் நிறம். அது காலகாலமாக இந்துத்துவத்தின் நிறமாக இருந்துவந்த காரணத்தால்……. என்னை இந்துத்துவர், “ன்” அல்ல “ர்”, (consider changing all ன் to ர், for example எர்று, ஒர்று, கூராகீரா, , otherwise you will get a long letter) என்று சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் பிரக்ஞையற்றவர்கள்+++++++++தியானம் ஒன்றே எல்லாவற்றுக்கும் திர்வாக முடியும். இதைப் புரிந்து கொள்ளமுடியாதது “நெருப்பின் நிறம் காவி” என்றுச்சொன்ன எனது தப்பா??????????????????????????????? பிரக்ஞ்சையற்ற பார்வையாளர்களின் தப்பா?????????????????????????????????????
மேலும், நான் எழுதிய கவிதையைத் தருகிறேன்….
எனது மூக்கை நானே பொத்தல்
கழிப்பறையில் நான்.
“நிர்வாணம்(மாய்)”
என் சுய சம்பவத்தைச் செய்தேன் ..
கறைபடிந்த எனது கொமெட்டை..
அதைக் கழுவக்கூடிய திராவகத்தை…..
எனது ஆண் குறியை…
அதிலிருந்த ஆணாதிக்கத்தை….
எனது வயிற்றை..
அதனுள்ளிருந்த சமியாச் சாப்பாட்டை….
கண்ணாடி முன் நிர்வாணமாய் நான் ….
ஆனால்…
எனது சம்பவத்துக்காக நானே மூக்கைப் பொத்தவில்லை.…
எனது எதிர்மறைகளுக்காக…
ஆகவே
சமரசம் செய்து கொண்டேன்…
எனது சம்பவத்தை நான் ரசித்துக்கொண்டேன்….
ஆனால்
பொதுவெளியில்
பொத்தினேன் எனது மூக்கை
அவர்களது சம்பவங்களுக்காய்….
புடலங்கா தின்றார் என்பதற்காக…
புளிச்ச ஏப்பம் விட்டார் என்பதற்காக….
முட்டைப் பொரியலின் ஆதரவாளர் என்பதற்கா…
ஏதனம் கழுவாதவர் என்பதற்காக…
சமையற்குறிப்பு எழுதினார் என்பதற்காக…
பொரித்த மீனின் ரசிகர் என்பதற்காக….
மிதிவெடி சாப்பிட்டார் என்பதற்காக….
பாலாப்பழம் உண்பவர் என்பதற்காக…
ஒடியற்கூழின்மேற் பிரியம் கொண்டார் என்பதற்காக….
….
…..
என் இரு விரல்களைப் பாவித்துப்…
பல முறை பொத்தினேன்…
அப்படி எனின்….
என் மூக்கையும் நானே பொத்த வேண்டுமல்லவா….
இவை ஒவ்வொன்றுக்காகவும்…
ஆகக் குறைந்தது ஒன்றுக்காகவாவது…
இறுதியில்…
ஏன் மூக்கை நானே பொத்திய பின்…
இந்தச் சம்பவம் எதற்காக…
யாருக்கா….?
யாரிருப்பார் சம்பவம் செய்ய…?
நண்பர்களே…
சம்பவங்கள்…
மூக்குகளைப் பொத்துவதற்காக அல்ல…
அனைவரும் ரசிப்பதற்காக…
கசடுகளைத் துறப்பதற்காக….
பிரக்ஞ்சை பெறுவதற்காக….
அகம் நோக்கிப் பார்ப்பதற்காக…
நன்றி.
கூனாகீனாவின் குறிப்புகள்
- வாமுபேபி குழுமம் என்பதை “வாந்தி முற்போக்கு பேதி பிற்போக்கு” குழுமம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்பவர்களோடு கண்ணைக் கட்டிக் கோபம், பாம்பு வந்து கொத்தும்.
- திரை பாரா மீ தனி மின்னஞ்சலில் இந்தச் சம்பவத்தை சுவீடன் சுருளி, ஆயிரம் பெயருடைய நடால், பேரரசன் கதாதர், புல்லட் சத்துருக்கன் ஆகியோர் சேர்ந்து செய்ததாகவும், அவர்கள் நுண்ணுணர்வில்லாதவர்கள் என்றும், சம்பவத்தின் பின்விளைவு தாங்க முடியாததாயிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இந்த மின்னஞ்சலை ரகசியமாகப் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டார். மின்னஞ்சல் வெளிவந்தால் அவர் கட்டமைத்திருக்கும் பிம்பம் சிதறிவிடுமாம். அவரது மின்னஞ்சலை வாசித்து முடிக்க கூனாகீனாவாகிய எனக்கு இரண்டு நாட்கள் பதினேழு மணித்தியாலங்கள் செலவாகின.
- ஒரு சம்பவம் விவரித்துக்கூறப்படும்போது வேறுவேறான வடிவங்களை எடுத்துக்கொள்கிறது, அவரவர் சார்புக்கேற்ப. ஆகவே, ஒரு சம்பவத்தை உங்கள் நோக்கில் நீங்கள் சொல்லலாம். ஆனால், சம்பவமே நடக்கவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம்.