1928 இல் இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி, அந்தத் தொடரில் 3-0 என்கிற மோசமான தோல்வியைத் தழுவியிருந்தது. அதன் பின்னராக 1930 ம் ஆண்டு இங்கிலாந்து அணி மேற்கிந்தியத்தீவுகளுக்கு ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. மேற்கிந்தியத்தீவுகளுக்கும், நியூசிலாந்துவுக்கும் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து மேற்கொண்டிருந்தபடியால், மேற்கிந்தியத்தீவுகளுக்கு வந்த இங்கிலாந்து அணி முழுப்பலமுடையதாய் இருக்கவில்லை. மாசி 26, 1930 அன்று, இங்கிலாந்தைத் தோற்கடித்ததன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணி தமது வெற்றிக்கணக்கைத் தொடங்கினார்கள். தொடரையும் 1-1 என்கிற வகையிற் சமன்செய்தார்கள். இந்தத் தொடரிற்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியிலிருந்த வெள்ளையினத்தவர்கள் அல்லாத வீரர்களின் திறமை முதலில் வெளிவந்தது எனலாம். துடுப்பாட்ட வீரர் ஜோர்ஜ் ஹெட்லி (George Headley) மற்றும் சகலதுறை வீரர் லாரி கொன்ஸ்ரன்ரைன் (Learie Constantine) ஆகியோரின் திறமையான ஆட்டம் பலரையும் ஈர்த்தது.
லாரி கொன்ஸ்ரன்ரைன் (Learie Constantine)
சகலதுறை வீரரான லாரி கொன்ஸ்ரன்ரைன் ட்ரினிடாட்டைச் சேர்ந்தவர். வலதுகை மட்டைவீரர் மற்றும் வலதுகை வேகப் பந்துவீச்சாளர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான கொன்ஸ்ரன்ரைன் தனது திறமை மூலம் தம்மைப் பிணைத்த அடிமைத்தளையை உடைக்க விரும்பினார். மேற்கிந்தியத் தீவுகளில் வெள்ளையரல்லாத துடுப்பாட்டவீரர்களுக்குப் பெரியளவில் வாய்ப்புகள் கிட்டாதநிலையில், இவர் இங்கிலாந்திலுள்ள கழகங்களுக்காகப் போட்டிகளில் பங்குபற்றியும் வந்தார். மேற்கிந்தியத்தீவுகளுக்காக 5-நாட் போட்டிகளிற் பெறப்பட்ட முதலாவது இலக்கை வீழ்த்தியவர் என்கிற பெருமைக்குரியவரான கொன்ஸ்ரன்ரைன், மேற்கிந்தியத்தீவுகளுக்காக 1928 தொடக்கம் 1930 வரை 18 5-நாட் போட்டிகளில் விளையாடினார்.
கொன்ஸ்ரன்ரைனின் ஆட்டத்திறண் சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளைவிட உள்ளூர் மற்றும் கழக அளவிலான துடுப்பாட்டப் போட்டிகளிலேயே அதிகம் வெளிப்பட்டது. இருந்தபோதும், விளையாடிய காலத்திலிருந்தே நிற ஒடுக்குமுறைக்கெதிராகச் செயற்பட்டுவந்தார். பின்னர் அரசியலிலும் நுழைந்த கொன்ஸ்ரன்ரைன், இங்கிலாத்துக்கான பிரித்தானியத் தூதுவராகவும் கடமையாற்றினார். அவரின் இறுதிக்காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுடன் மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்தார் என விமர்சிக்கப்பட்டார்.
ஜோர்ஜ் ஹெட்லி (George Headley)
அனைவருக்கும் இலகுவாக விளங்கக்கூடிய வகையில் சொல்வதானால், துடுப்பாட்டத்தின் வரலாற்றில் வெள்ளையரல்லாத முதல் உச்ச நட்சத்திரம் ஜோர்ஜ் ஹெட்லி. இவரது சமகாலத்திற்தான் 5-நாட் துடுப்பாட்டப் போட்டிகளின் சாதனை நாயகன் டொனால்ட் பிரட்மன் அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடிக்கொண்டிருந்தார். ஹெட்லியை “கறுப்பு பிராட்மன்” என வெள்ளையர்கள் அழைக்க, மேற்கிந்தியர்கள் பிராட்மனை “வெள்ளை ஹெட்லி” என்றழைக்குமளவுக்கு இருபேரும் புகழ்பெற்றிருந்தார்கள்.
ஜமேய்க்கரான ஹெட்லி (பிறந்தது பனாமாவில்), முதன்முதலாக 5-நாட் போட்டியொன்றை விளையாடியது பார்பேடோஸில். பார்பேடியர்களுக்கு இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவருக்குப் பதில் ஒரு பார்பேடியர் விளையாடியிருக்கலாம் என்பது அவர்களின் எண்ணமாயிருந்தது. இருப்பினும் ஹெட்லி தமது திறமையான துடுப்பாட்டம் மூலம் அந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டவாய்ப்பில் 176 ஓட்டங்களைப் பெற்று, அனைவர் மனங்களிலும் இடம்பிடித்தார்.
ஹெட்லி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 1930 தொடக்கம் 1954 வரை 22 போட்டிகளில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டிகளில், சராசரியாக ஒரு ஆட்டவாய்ப்புக்கு 60.83 ஓட்டங்கள் என்கிற விகிதத்தில், 10 சதங்கள், 5 அரைச் சதங்கள் அடங்கலாக 2190 ஓட்டங்களைக் குவித்தார். அதிகபட்சமாக இங்கிலாந்துக்கு எதிராக 270 ஓட்டங்களைக் கிங்ஸ்ரன் மைதானத்தில் குவித்திருந்தார். உள்ளூர்ப்போட்டிகளில் 69.86 என்ற சராசரியோடு 9921 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 1954 இல் ஓய்வு பெற்றபின் ஹெட்லி ஜமேய்க்கா அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார்.
பி.கு: இவரது மகனான றொன் ஹெட்லி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக இரண்டு 5-நாட் போட்டிகளிலும், 1 ஒரு நாட் போட்டியிலும் விளையாடினார். மேலும், ஜோர்ஜ் ஹெட்லியின் பெயரனான டீன் ஹெட்லி இங்கிலாந்து அணிக்காக முறையே 15 மற்றும் 13 5-நாட் போட்டிகளிலும், ஒரு நாட் போட்டிகளிலும் விளையாடினார்.
இப்படியாக, ஆங்கிலேய/வெள்ளையினப் பிரபுக்களால் நிரம்பியிருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி என்கிற புறாக்கூட்டத்துக்குள்ளே முதற்கல் எறியப்பட்டது. கலைந்த புறாக்கள் எப்படி முற்றாகப் பறந்தன என்பதை இனிவரும் அத்தியாயங்களிற் பார்க்கலாம்.
(தீபம் கனடா-40)