மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-4

இறுதியிரு போட்டிகளையும் லென் ஹட்டன் (Len Hutton), கபி அலன் (Gubby Allen), ஜிம் லேக்கர் (Jim Laker) போன்ற திறமையான வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் இலகுவாக வெற்றிகொண்டனர். இப்போட்டித் தொடரின் முதற்போட்டியில் அறிமுகமாகியிருந்த எவேர்ட்டன் வீக்ஸ் (Everton Weeks) ஜமேய்க்காவில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும், இரண்டாவது போட்டியில் அறிமுகமாகியிருந்த ஃப்ராங் வொரெல் (Frank Worrell) மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடி சதங்களைப் பெற்றிருந்தார்கள். வொரெல் தமது அறிமுகப்போட்டியில் 97 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இவ்விருவரோடும், முதலாவது போட்டியில் அறிமுகமான க்ளைட் வோல்கொட் (Clyde Walcott) என்பாரும் சேர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயங்களை எழுதலானார்கள். மூன்று “w” க்கள் எனப் பிரபலமடைந்த இவர்களைப் பற்றி விபரமாகப் பார்ப்போம்.

க்ளைட் வோல்கொட் (Sir. Clyde Walcott)

walcott

சேர். க்ளைட் வோல்கொட் பார்படோஸ் தீவுகளின் ப்ரிட்ஜ்ரவுணில் பிறந்தவர். தனது உயர்நிலைப்பாடசாலையான ஹரிசன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே வோல்கொட் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிக்காட்டுபவராயிருந்தார். மேல்வரிசை, மத்தியவரிசை என எங்கும் துடுப்பெடுத்தாடக்கூடியவராயும், சிறந்த இலக்குக்காப்பாளராயும், in-swing வகையிற் பந்து வீசவல்லவராயும் திகழ்ந்த வோல்கொட், 1942 ம் வருடத்திலிருந்து பார்படோஸ் அணிக்காகப் பிராந்தியப்போட்டிகளில் விளையாடவாரம்பித்தார். இருந்தபோதும், துடுப்பாட்ட உலகின் கவனம் இவர்மீது திரும்பியது 1946 ஆம் ஆண்டில், ட்ரினிடாட் அணிக்கெதிராக இவர் ஆட்டமிழக்காமற் பெற்ற 314 ஓட்டங்களின் மூலமே. அந்தபோட்டியில் இவரோடு இணைந்து அப்போதைய இணைப்பாட்ட சாதனையான 574 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டவர் யார் தெரியுமா? சேர். ஃப்ராங் வொரல்

வோல்கொட் 1948 இல் இங்கிலாந்துக்கெதிரான தொடரிற்தான் முதன்முதலாக சர்வதேச ஐந்துநாட் போட்டிகளில் அறிமுகமானார். முதற்சில போட்டிகளில் துடுப்பாட்டத்தில் இவரால் பெருமளவு சோபிக்கமுடியாமற் போனபோதிலும், ஒரு இலக்குக்காப்பாளராகவும் இருந்த காரணத்தால் அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். 1948 இல் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் இரண்டு சதங்கள் இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 452 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னராக இங்கிலாந்துக்கெதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் 168 ஓட்டங்களை ஆட்டமிழக்காமற் பெற்றுத் தன்னை ஒரு தரமான துடுப்பாட்டவீரராகப் பிரகடனம் செய்துகொண்டார்.

வோல்கொட் முதன்முதலாக 1951/52 இல் அவுஸ்திரேலியாவில் விளையாடிய தொடரில் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை எனினும், நியூசிலாந்தில் மேலுமொரு சதத்தைப் பெற்றுக்கொண்டார். 1953 இல் இந்திய அணிக்கெதிராக மேலுமிரு சதங்களை ஜோர்ஜ்ரவுண் மற்றும் கிங்ஸ்ரன் ஆகிய மைதானங்களிற் குவித்தார். 1954 இல் இங்கிலாந்துக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவரது அதிகபட்ச சர்வதேசப் பெறுதியான 220 ஓட்டங்கள் உட்பட இரு சதங்கள் அடங்கலாக 698 ஓட்டங்களைக் குவித்தார் வோல்கொட்.  1955 இல் இயன் ஜோன்சன் தலைமையில் நீல் ஹார்வி, கீத் மில்லர், ஆர்தர் மோரிஸ், றிச்சி பெனோ, றே லிண்ட்வோல் ஆகியோரை உள்ளடக்கிய பலமிக்க அவுஸ்திரேலிய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து, ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரொன்றை 3-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. மேற்கிந்தியத்தீவுகள் மோசமாகத் தோற்ற தொடராயினும், வோல்கொட் 5 சதங்களடங்கலாக 827 ஓட்டங்களைக் குவித்தார். அதிலும், இரண்டு போட்டிகளில் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார்.

1960 இல் விளையாடுவதை நிறுத்திக்கொண்ட வோல்கொட் பின்னர் ஒரு நிர்வாகியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். சர்வதேசத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபையின் முதலாவது ஆங்கிலேயர்/வெள்ளையர் அல்லாத தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவரும் இவரே. 44 போட்டிகளில் 15 சதங்கள், 14 அரைச் சதங்கள் அடங்கலாக 56.68 என்கிற சராசரியில் 3798 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட க்ளைட் வோல்கொட், நவீனகாலத் துடுப்பாட்டப்போட்டிகளில் கொண்டாடப்படும் அடம் கில்கிறிஸ்ட், குமார் சங்கக்கார போன்ற துடுப்பெடுத்தாடவல்ல இலக்குக்காப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம். துடுப்பாட்ட உலகுக்கு இவரின் பங்களிப்புகளைக் கருத்திற்கொண்டு 1994 இல் “சேர்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட க்ளைட் வோல்கொட், 2006 ம் வருடம் தமது 81 வது வயதில் காலமானார்.

(தீபம் கனடா-44)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s