மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-7

1948 ம் வருடம் மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியை 2-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தோற்கடித்தது. அந்தத் தொடரில் அறிமுகமாகிச் சிறப்பாக விளையாடி, அதன் பின்னரான தொடர்களிலும் சிறப்பாக விளையாடியதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற “மூன்று W க்கள்” பற்றிய சுருக்கமான அறிமுகங்களைத் தொடர்ந்து, மீண்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் துடுப்பாட்ட வரலாற்றுக்குள் மீளவும் புகுவோம்.

1948 இல் சொந்த மண்ணிற்பெற்றுக்கொண்ட வெற்றியைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரில் வொரெல் சில தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. ஆனால், வீக்ஸ்சும் வோல்கொட்டும் விளையாடினார்கள். இங்கிலாந்துக்கெதிரான கடைசிப்போட்டியில் 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வித்திட்ட வீக்ஸ், இந்தியாவில் பெற்றுக்கொண்ட பெறுதிகள் வருமாறு: டெல்லி-128, மும்பாய்-194, கொல்கத்தா 162 & 101, சென்னை-90, மும்பை 56 & 48. மொத்தம் 779 ஓட்டங்கள். ஐந்து ஆட்டவாய்ப்புகளில் (எதிர் இங்கிலாந்து-1, எதிர் இந்தியா-4) தொடர்ந்து சதங்கள். 6 வது சதத்தை மயிரிழையில் தப்பவிட்டார். வோல்கொட் மற்றும் ரூசி மோதி, விஜய் ஹாசாரே போன்ற இந்திய வீரர்களும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வியின்றிச் சமநிலையில் முடிந்துபோயின. நான்காவதாகச் சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஒரு ஆட்டவாய்ப்பு மற்றும் 193 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மும்பையில் நடந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டு இலக்குகள் கையிருப்பில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நேரமின்மை காரணமாகப் போட்டி சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக 1-0 என்கிற கணக்கில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர்அப்போட்டித்தொடரைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.

1950 ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடரிற்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சுழற்பந்து இரட்டைகளான அல்ஃப் வலன்ரைன் (Alf Valentine) மற்றும் சொன்னி ராமதீன் (Sonny Ramadhin) ஆகியோர் அறிமுகமானார்கள். முதற்போட்டியை இங்கிலாந்து அணி இலகுவாக வெற்றிகொண்டபோதும், வோல்கொட், வீக்ஸ் மற்றும் வொரெல் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தினாலும், வலன்ரைன் மற்றும் ராமதீனின் சுழற்பந்து வீச்சாலும் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வலது கை உட்-சுழற் பந்துவீச்சாளரான ராமதீன் 26 இலக்குகளையும், இடது கைச் சுழற்பந்துவீச்சாளரான வலன்ரைன் 33 இலக்குகளையும் சரித்திருந்தார்கள். இத்தொடரில் வேறு எந்தப் பந்துவீச்சாளரும் 15 இலக்குகளைக்கூடப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் வீழ்ந்த 80 இங்கிலாந்து இலக்குகளில் 59 ஐ இந்த இணை சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

sonny-ramadhin-and-alf-vale

இங்கிலாந்தில் பெற்ற பெருவெற்றியின் உத்வேகத்தோடு அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வலன்ரைன் இந்தத் தொடரிலும் 24 இலக்குகளை வீழ்த்தினார். ராமதீனால் 14 இலக்குகளையே பெற முடிந்தது. அவுஸ்திரேலியாவில் ஜோன்ஸ்டன் (23 இலக்குகள்), லிண்ட்வோல் (21), மில்லர் (20) ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிப்பதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டவீரர்கள். வொரெல், ஸ்ரோலிமர், கோமேஸ் ஆகியோர் 300 க்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தபோதும், பல முக்கியமான தருணங்களில் சிறப்பாகச் செயற்படமுடியாமல் மொத்த அணியுமே தடுமாறியது. வொரெலின் சிறப்பான பந்துவீச்சுக்காரணமாக அடிலேய்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியை  ஆறு இலக்குகளால் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி, ப்ரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியை மூன்று இலக்குகளாலும், மெல்பேர்னில் நடைபெற்ற நான்காவது போட்டியை ஒரு இலக்காலும் போராடித் தோற்றது. சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளை 7 இலக்குகள் மற்றும் 202 ஓட்டங்களால் இலகுவாக வென்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 4-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது.

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டா மேற்கிந்தியத்தீவுகள் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற கணக்கில் இலகுவாக வெற்றிகொண்டது. வீழ்த்தப்பட்ட 31 நியூசிலாந்து இலக்குகளில் 20 ஐ ராமதீனும் (12), வலன்ரைனும் (8) பகிர்ந்துகொண்டனர். வொரெல், வோல்கொட் மற்றும் ஸ்ரோலிமர் ஆகியோர் வெற்றிதோல்வியின்றி முடிந்த இரண்டாவது போட்டியில் சதங்களைப் பெற்றிருந்தார்கள்.

(தீபம் கனடா-50)

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s