1953 ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் ப்றிட்ஜ்ரவுணில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின்மூலம் தொடரைத் தன்வயமாக்கிக்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வீரர்கள். வீக்ஸ் 760 ஓட்டங்களை 3 சதங்கள் 2 அரைச் சதங்களுட்படப் பெற்றுகொண்டார். ஐந்தாவது போட்டியில் வீக்ஸ், வோல்கொட், வொரெல் மூவருமே சதமடித்தார்கள். வலன்ரைன் 28 இலக்குகளை இந்தப் போட்டித்தொடரிற் கைப்பற்றியபோதும், இந்தியவீரர்களும் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இப்போட்டித்தொடரின் மிகுதி நான்கு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
1954 ஆம் ஆண்டு இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகளிற் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மிக விறுவிறுப்பான இந்தத் தொடரின் முதலிரு போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி முறையே 140 மற்றும் 181 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றிகளைத் தனதாக்கிக்கொண்டபோதும், மூன்றாவது போட்டியிலும் ஐந்தாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசத்திற் பெற்றுக்கொண்ட வெற்றிகளின் காரணமாகவும், வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நான்காவது போட்டியினாலும், தொடரானது 2-2 என்கிற வகையில் சமநிலையில் முடிந்தது. நான்காவது போட்டியில் வீக்ஸ், வொரெல், வோல்கொட் மூவரும் சதமடித்தார்கள். வோல்கொட் இந்தப் போட்டித்தொடரில் மூன்று சதங்கள், மூன்று அரைச் சதங்கள் அடங்கலாக 698 ஓட்டங்களைக் குவித்தார். பதிலுக்கு இங்கிலாந்தின் அணித்தலைவரான லென் ஹட்டன் 677 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ராமதீன் 23 இலக்குகளைச் சாய்த்தார். வீக்ஸ் (487 ஓட்டங்கள்) வொரெல் (334) ஆகியோரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிசார்பில் சிறப்பாக விளையாடியிருந்தார்கள்.
1955 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலிய அணியைத் தம்மண்ணுக்கு வரவேற்றார்கள். கீத் மில்லர், றே லிண்ட்வோல், நீல் ஹார்வி, றிச்சி பேனோ, இயன் ஜோன்சன், ஆதர் மொறிஸ் போன்ற சிறந்த ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியை மேற்கிந்தியத்தீவுகளால் சமாளிக்க முடியாமற்போனது. இத்தனைக்கும் வோல்கொட் வெறிகொண்டவர் போல அற்புதமாக மட்டையெடுத்தாடினார். ஐந்து சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 827 ஓட்டங்களைக் குவித்தார். போர்ட்-ஒஃப்-ஸ்பெயினிலும், கிங்ஸ்ரனிலும் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார். வீக்ஸ்சும் தம் பங்குக்கு 469 ஓட்டங்களைப் பெற்றார், ஒரு சதம் மூன்று அரைச்சதங்கள் உள்ளடங்கலாக. இருந்தபோதும் நீல் ஹார்வி (650 ஓட்டங்கள், 3 சதங்கள்), கீத் மில்லர் (439 ஓட்டங்கள், 3 சதங்கள், 20 இலக்குகள்), றே லிண்ட்வோல் (187 ஓட்டங்கள், 1 சதம், 20 இலக்குகள்), றிச்சி பேனோ (246 ஓட்டங்கள், 1 சதம், 18 இலக்குகள்), கொலின் மக்டொனால்ட் (449 ஓட்டங்கள், 2 சதங்கள்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்திறணுக்கு முன்னால் ஈடுகொடுக்கமுடியாமல் 3-0 என்கிற கணக்கில் தொடரை இழந்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.
இதன்பிறகு நியூசிலாந்தில் நடந்த தொடரை 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வீக்ஸ் (418 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்திலும் ராமதீன் (20 இலக்குகள்), வலன்ரைன் (15 இலக்குகள்) பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பெற்றுக்கொண்ட வெற்றி அவர்களது துடுப்பாட்ட வரலாற்றின் முதல் வெற்றியென்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் 1957 ஆம் வருடத்திலிடம்பெற்ற இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மோசமான அனுபவமாகவே அமைந்தது. அணிவீரர்கள் யாருமே சரியாகச் செயற்படாமற்போக 3-0 என்கிற கணக்கில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இழந்தார்கள். 5-0 என்கிற மோசமான கணக்கிலிருந்து நேரப்பற்றாக்குறை காரணமாகவே மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் மயிரிழையிற் தப்பித்தார்கள்.
நாடு திரும்பிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர், 1958 இல் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டார்கள். அந்தப் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டார்கள். இந்தத் தொடர் துடுப்பாட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். பல சாதனைகள் இத்தொடரில் நிலைநாட்டப்பட்டன. இத்தொடரைப் பற்றி விரிவாகப் பார்க்கமுன்னர், இத்தொடருக்கு முன்னர்வரை “திறமைசாலி” என்று அடையாளங்காணப்பாட்டாலும் தமது திறமையை அதுவரையும் நிரூபிக்காத ஒரு இளம்வீரர் மேற்கிந்தியத்தீவுகளின் புதிய நாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அவரைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
(தீபம் கனடா-52)