தமிழில் Gay & Lesbian குறும்/திரைப்படங்களைத் தடைசெய்ய வேண்டும்

-13 வது சர்வதேசத் தமிழ்க் குறும்படவிழா ரொறன்ரோவை முன்வைத்து

சுயாதீன கலை, திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து நடத்திய 13வது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ஜூலை 7, 2018 சனிக்கிழமை மாலை Warden / Lawrence சந்திப்புக்கருகேயுள்ள இரட்சணிய சேனை மண்டபத்தில் நடைபெற்றது. இது நான் பங்குகொண்ட இரண்டாவது ரொறன்ரோ சர்வதேசத் தமிழ்க் குறும்படவிழா. இதற்கு முன் 2011 இல் சென்றிருந்தேன். அவ்விழாவுக்கு ஜெயமோகன் சிறப்பு விருந்தினர். சிறப்புத் திரையிடலாக ‘பாலை’. அடுத்த வருடம் திரும்பவும் பங்குகொள்வதில்லை என்ற முடிவை எஸ்.ரா. சிறப்பு விருந்தினர் என்ற அறிவிப்பு உறுதிசெய்தது. வயதேற வயதேற வைராக்கியம் குறைந்து, இந்த வருடம் போவதாகத் தீர்மானித்திருந்தேன். விமர்சகர் விருதைத் தெரிவுசெய்வீர்களா எனத் ‘தாய்வீடு’ திலீப்குமார் கேட்டதும் இன்னொரு காரணம்.

மொத்தம் 11 படங்களைத் திரையிட்டார்கள். அதில் இரண்டு சிறப்புத் திரையிடல்கள். இரண்டு திரைப்படங்கள் காலம் தாழ்த்திய சமர்ப்பிப்புக்காரணமாக விருதுகளுக்காகப் போட்டியிடவில்லை. விமர்சகர் விருதுக்காக ‘சருகுவெளி’ என்கிற திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்தோம். இதே திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படம் என்கிற நடுவர்கள் விருதும் கிடைத்தது. காணாமலாக்கப்பட்ட மக்களைப் பற்றி அக்கறையோடும், குறும்படமொன்றுக்கான நேர்த்தியோடும் உருவாக்கப்பட்டிருந்தது ‘சருகுவெளி’. கைகால்கள் கட்டப்பட்டுப் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிர்வாண உடலொன்றின் காட்சிப்படுத்தலோடு தொடங்கும்போதே இப்படம் தனித்துத் தெரிந்ததெனலாம். குறிப்பிட்த்தக்க மற்றைய படங்கள் சிலவற்றைப் பற்றியும் பார்க்கலாம்.

“வேடம்” என்கிற பிரான்சிலிருந்து வந்த படம் நன்றாயிருந்தது. பிரான்சில் தஞ்சமடைந்து வேறு நால்வருடன், வேலையும் கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் போராளி பற்றிய கதை. மற்ற நால்வரும் பொட்டரோடும், தலைவரோடும், அவரோடும் இவரோடும் என்று பெரும்புலிகளாக இருந்ததாய்ச் சொல்லிக்கொள்பவர்கள், இப்போராளியோ தான் எல்லைப்படையிலிருந்த்தாய்ச் சொல்கிறார். அவரை “மாஸ்டர்” என்று நக்கலடிப்பதோடு, சில சமயங்களில் “உங்களை நம்பித்தானடா போராட்டத்தைவிட்டுட்டு இஞ்ச வந்தம்” என்று கடிந்தும் கொல்கிறார்கள் (எழுத்துப்பிழையல்ல), தலைமையால் இயக்கச் செயற்பாட்டுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பெரும்புலிகள். இறுதியுத்தத்தில் குடும்பத்தையிழந்து, தத்தெடுக்கப்பட்டு பிரான்சு வந்த பார்வையில்லாத சிறுமி இப்போராளியைக் குரல்வழி கண்டுகொள்வதுடன், பெரும்புலிகளின் வேடம் கலைவதாய் முடிகிறது படம். முன்னாள் போராளியாக நடித்த அஜந்தனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிட்டியது எனக்கும் உவப்பே. ‘நெய்தல்’ என்றொரு படம். கால்கள் மட்டுமே காட்டப்படும் சிறுவன் கடலைக் கடிந்துகொள்கிறான், சுனாமியில் அம்மாவையும் சிறிலங்கா இராணுவத்திடம் அப்பாவையும் பறித்தெடுத்ததுக்காக. அருமையான ஒளிப்பதிவு அருமையான கதைக்கண்ணி. சுனாமிபற்றியும், சிறிலங்கா இராணுவம் பற்றியுமான எழுத்துவடிவிலான குறிப்புகள் இருந்திருக்காவிட்டால், அருமையான படமுங்கூட. சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட மீனவர்கள் அளவுக்கு, இந்திய மீனவர்கள் (யார் பொருட்டோ) அத்துமீறி வந்து ஈழத்து மீனவரின் வயிற்றில் அடிப்பதுபற்றிய எந்தவிதமான புரிந்துணர்வும் தமிழகத் தமிழர்கள் மற்றும் அவரோடிணைந்தியங்கும் ஈழத்தமிழர்களுக்கு இல்லாதிருக்கிற சூழலில், இப்படத்தை என்னாற் கொண்டாட முடியவில்லை. சிறுவனின் கடிதலோடு மட்டும் நின்றிருந்தால் படம் நன்றானதாயிருந்திருக்கும்.

காலந்தாழ்த்திய சமர்ப்பணம் காரணமாய் விருதுகளுக்காகப் போட்டியிடாத மதிசுதாவின் இரு திரைப்படங்களும் சிறப்பு. ஓரிடத்துக்கு உரித்திலாதோரைக் காத்தல், உரித்துளோரை மாய்த்தல் என்கிற கருத்தைச்  சொல்லிச் சென்ற ‘தர்மம்’ i-Phone கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நிமிடப் படம். முதற்தரம் விளங்கவில்லை, கவனம் சிதறியிருந்த்து. நல்லவேளை, சிறு பிரச்சினை காரணமாய் இரண்டாந்தரம் போட்டார்கள். பக்கத்திலிருந்த அருண்மொழிவர்மன் சொன்ன ‘அது தேளின் இடமல்ல’ என்கிற வார்த்தையும் படத்தை விளங்கிக்கொள்ள உதவியாயிருந்த்து. மதிசுதாவின் மற்றைய சமர்ப்பிப்பான “வெடியன் மணியமும் இடியன் துவக்கும்” என்கிற திரைப்படம்தான் திரையிடப்பட்ட 11 இலும், அற்புதமாயிருந்த்து. ஒரு படைப்பாளியின் மிகப்பெருஞ்சாதனை தன் நிலத்தையும், வாழ்வையும் தன் படைப்புகளிற் சரியாய்ப் பதிதல் எனலாம். மதிசுதா அதில் பெருங்கெட்டிக்காரர். ‘மிச்சக்காசில்’ சிறுவன் சொல்லும் “என்ன அம்மா” விலிருந்து, வெடியன் மணியம் சொல்லும் “கடுவன்” வரை, மதிசுதா தன் நிலத்து மாந்தரையும், வாழ்வையும் வெள்ளித்திரையில் அச்சொட்டாகப் பதிந்துவருகிறார். எசுத்தரம்மாவுக்கும் வெடியன் மணியத்துக்கும் இடையே நடக்கிற உரையாடல்கள், மணியம் இழுத்துக்கொண்டு கிடக்கையில் அவருடைய உறவுகளுக்கிடையே நடக்கிற உரையாடல்கள் என யாவுமே, அவர்களோடு திரைக்கு வெளியே நாமும் வாழ்ந்துகொண்டிருந்தோமெனும் உணர்வைத் தந்தன. பேரனின் யுத்த சாதனைக்காகத்தான் தாத்தா இழுத்துக்கொண்டு கிடந்தார் என்கிற போரினை மேன்மைப்படுத்துகிற கதையேயெனினும், தன்னுடைய அரசியலை வெளிப்படையாகப் பேசுகிற, நிலத்தையும் , மாந்தரையும் அவர்தம் வாழ்வையும் சரியாய்ப்பதியக்கூடியவராயிருக்கிற மதிசுதா, எம் சமகாலத்தின் ஈழத்துத் திரைப்படப் படைப்பாளிகளின் நம்பிக்கைக்கீற்று. முல்லை யேசுதாசன் எங்களின் நடிகர் திலகம்.

இந்தத் திரைப்பட விழாவில், விவாதத்துக்கு உட்படுத்தப்படவேண்டிய திரைப்படமாக நான் கருதுவது, “இப்படிக்குக் காதல்” என்கிற Gay & Lesbian பற்றிய படத்தை. பெயரைப் பார்த்ததுமே எனக்கு ஏதோ செய்கிறது என த.அகிலனிடம் சொல்லியிருந்தேன். அந்தப்படம் உண்மையிலேயே “வைச்சு செஞ்சிச்சு”. ஆக, தமிழில் வந்திருக்கிற Gay & Lesbian பற்றிய, ரொறன்ரோ சர்வதேசக் குறும்பட விழாவோடு சம்பந்தப்பட்ட மூன்றுபடங்களைப் பற்றிப் பேசலாம்.

இப்படிக்குக் காதல்

ரம்யா மற்றும் அரவிந்த் காதலிக்கிறார்கள். கோவிலில் திருமணம் செய்யவிருக்கிறார்கள். அத்திருமணத்துக்காக 10 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்று சொன்ன ரம்யா, கடத்தப்படுகிறார். கொஞ்ச நேரப் பதட்டத்தின் பின் ரம்யாவைக் கடத்தியது அவரது நண்பரான ஸ்வேதா என்பது தெரியவருகிறது. இவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருப்பவர்கள். ஸ்வேதா, தான் ரம்யா மீது கொண்டிருக்கிற காதலை ரம்யாவுக்குச் சொல்கிறார். நீயில்லாமல் நான் வாழமுடியாது என்கிறார். அரவிந்துக்கும் இந்தக் கடத்தலைச் செய்த்து ஸ்வேதா என்பது தெரியவருகிறது. அவருக்கும், ரம்யாவுக்குமிடையிலான திருமணத்துக்கு மீண்டும் நாட்குறிக்கிறார்கள். அந்நாளுக்கு முதல்நாள் ரம்யா குழம்பியிருக்கிறார். அடுத்தநாளும் சரியான நேரத்துக்கு ரம்யா வராமற்போக, அரவிந்த் வீடு தேடி வருகிறார். வெற்றிப் புன்னகையோடு கதவைத் திறக்கிறார் ஸ்வேதா. இரு இதயங்கள் இணைந்த கோப்பையில் ஸ்வேதாவும் ரம்யாவும் தேநீர் அருந்திக்கொண்டிருப்பது கண்டு, ஸ்வேதாவை அறைகிறார் அரவிந்த். அத்தோடு முடிகிறது படம்.

இக்குறும்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஞாபகத்தில் வந்த இன்னொரு படம் 2011 ரொறொன்ரோ சர்வதேசக் குறும்படவிழாவில் திரையிடப்பட்ட, சதாபிரணவனின் “The Opposite” என்கிற திரைப்படம்

The Opposite

ரகு தினேசைக் கட்டிவைத்திருக்கிறார். அவரை விழித்துக்கொள்ளுமாறும் பணிக்கிறார். தினேசோ “என்னை ஏன் கட்டி வைத்திருக்கிறாய் என உனக்குத் தெரியுமா?” என வினவுகிறார். அவ்வினாவோடு திரைப்படம் அக்காட்சிக்கு முன்னோக்கிய காலத்துக்குப் பயணிக்கிறது. அஞ்சலியும் ரகுவும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். அவர்களது நேசத்தின் மூன்றாமாண்டு நிறைவடந்ததையிட்டு அஞ்சலியைத் தன்னை மணமுடிக்கக் கேட்கக் காத்திருக்கும் ரகுவுக்கு செல்வம் என்னும் நண்பன் அஞ்சலியையும் தினேசையும் ஒன்றாகப் பார்த்ததாகச் சொல்ல ரகுவோ அவர்களிருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமேயென்கிறான் கொஞ்சம் எரிச்சலுடன். ரகுவைச் சந்திக்க அஞ்சலி வந்த கொஞ்ச நேரத்திலேயே அஞ்சலியைச் செல்பேசியில் அழைக்கிறார் தினேஸ். மூன்றுவருடமாகத் தாங்கள் சந்திக்கும் போதெல்லாம் மட்டும் ஏன் அழைக்கிறார் தினேஸ் என்று ரகு கேட்க, இருவருக்குள்ளும் வாக்குவாதம். அஞ்சலி கோபித்துக்கொண்டு போய்விடுகிறார். காட்சி திரும்பவும் தினேசைக் கட்டிவைத்திருக்கும் அறைக்கு மாற, ரகு ஆவேசமாக “உன்னை நான் கட்டி வைத்திருப்பது எனக்கும், என் காதலுக்கும் நீ கொடுத்துக்கொண்டிருக்கிற தொல்லைக்காக” என்று சொல்லி “நீ அஞ்சலியைக் காதலிக்கிறாயா?” எனக் கேட்டு அடிக்கிறார். தினேசோ ஒரு விசித்திரமான, வில்லத்தனமான சிரிப்போடு “நான் வென்று விட்டேன்” என்கிறார். ரகு குழம்ப, “நானும் மூன்று வருடங்களாக்க் காதலிக்கிறேன், அஞ்சலியை அல்ல, உன்னை” என்கிறார் தினேஸ். ஒரு வில்லத்தனமான தலைச் சிலுப்பலுடன் “நான் ஒரு Gay” என்கிறார். “உன்னை அஞ்சலி எனக்கு அறிமுகப்படுத்திய உடனேயே உன்னில் காதல் கொண்டுவிட்டேன். சாவதென்றாலும் உனக்காகவே சாவேன்” என்கிறார். ரகுவோ, homo sexual ஆக இருப்பது பிழையல்ல, ஆனாற் தான் அவ்வாறல்ல என்கிறார். தான் அஞ்சலியைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வேன் என்கிறார். தினேசோ வெறிகொண்டவராக “நீ அஞ்சலியோடு சந்தோசமாக இருக்க முடியாது, நீ எனக்கானவன், எனக்கு மட்டுமேயானவன்” என்கிறார்.

இப்போது youtube இலிருக்கிற இந்தப் படத்தின் முடிவு, ரகு தினேசை பயங்கரமாக முறைப்பதாக முடிகிறது, அந்தப் பார்வை தினேசின் கொலையில் முடிந்ததாகவே 2011 இல் குறுந்திரைப்பட விழாவில் பார்த்ததாக நினைவிருக்கிறது. இந்த முடிவுக்காகவும், gay உறவு பற்றிய சித்தரிப்புக்காகவும் இக்குறும்படம் அன்று விமர்சிக்கப்பட, படைப்பாளியின் சார்பானவர்களிடமிருந்து “கருத்தியற் சுதந்திரம்” என்கிற பதில் வந்த்தும் ஞாபகம். மேலும், தமிழில் வந்த முதல் ‘gay’ குறும்படம் என்று யாரோ சொல்லப்போக, இல்லை, இதற்கு முன்னரே ‘You 2’ என்கிற lesbian குறும்படத்தைத் தான் எடுத்திருப்பதாகச் சொன்னார் நாடகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான சுமதி ரூபன்

You 2

You 2 என்கிற இந்தக் குறும்படம் Nirvana Creations என்கிற அமைப்பின் இணையத் தளத்திலிருந்து பார்த்த நினைவுள்ளது. இப்போது அதைக் காணவில்லை. கதைச் சுருக்கம் இதுதான். குடும்பவன்முறையாற் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தன் நண்பரின் வீட்டிற்போய் வாழ்கிறார். இப்பெண்ணுக்குக் குழந்தைகளும் உள்ளார்கள். தன் கணவர் என்றாவது திருந்துவார் என நம்புபவராயும், அவரிடம் திரும்பிப் போவதை விரும்புபவராயும் இப்பெண் இருக்கிறார். இருந்தும், அவரது நண்பரும் அவர் மேல் மிகுந்த அன்பாயிருக்கிறார். இவர்மீதான ஈர்ப்பை நண்பர் முதலில் வெளிப்படுத்தச் சட்டென விழித்துக்கொண்டு தயக்கம் காட்டுகிறார். இருந்தும் இருவருக்குள்ளும் ஒரு lesbian உறவு மலர்கிறது. நண்பர் வேலைக்குப் போய்வருபவராயும், இவர் வீட்டுவேலைகளைச் செய்பவராயும் இருக்கிறார்கள். ஒருநாள் வேலையால் அலுத்துக் களைத்து வருகிற நண்பர், இவரிடம் கோப்பியோ, தேநீரோ கேட்க, இவரும் அதைக் கொண்டுவருவார். அக்கோப்பியோ தேநீரோ சுவையற்றதாய்ப்போக வரும் வாக்குவாத்த்தில் நண்பர் இவரை அடிக்க வர “நீயுமா?” (You too? You 2) என்கிற கேள்வியோடு படம் முடிகிறது.

உண்மையில் இப்படத்தைத் திரும்பப் பார்த்து எழுதவேண்டும் என்கிற ஆவல் இருந்தது. ஆனாற், தேடிப்பிடிக்கமுடியவில்லை. நண்பர் தனியாயிருப்பது பற்றிய உரையாடல்களும் படத்திலிருந்தன. மேலுள்ள கதைச் சுருக்கம், என்னுடைய நினைவுகளிலிருந்து.

இம்மூன்று படங்களுமே Gay & Lesbian என்கிற வகைமாதிரிக்குள் உள்ளடக்கப்படக்கூடிய படங்களா என்கிற கேள்வியை முதலில் எழுப்பவேண்டும். அக்கேள்விக்கான எனது பதிலாக சுமதி ரூபனின் ‘You 2’ வை இவ்வகைமாதிரிப் படம் என ஓரளவுக்காவது ஒப்புக்கொள்ளலாம். மற்றைய இரண்டு படங்களும் Gay & Lesbian உறவு பற்றிய எந்தவிதமான புரிந்துணர்வுமின்றி, அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எடுக்கப்பட்டவை. அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக விளிம்புநிலை மாந்தர்களின் கதைகளை இழுத்துவரும் இயக்குனர்கள் கண்டனத்துக்குரியவர்கள். இனி இப்படங்கள் பற்றிய பிரச்சனைகளைப் பற்றிப் பேசலாம்.

மூன்று படங்களுமே தம்மை Gay & Lesbian படங்களாகத் தகவமைத்துக்கொள்ள முயன்றிருப்பவை. ஆனால், மூன்று படங்களுமே அவ்வகை உறவின் சிக்கல்களைப் பேசுகிறோம் என்கிற பாவனையில், அவ்வகை உறவுகளை நேர்மறையாகச் சித்தரித்திருக்கின்றன என்பதுதான் சிக்கல்.

இப்படிக்குக் காதல் & The Opposite

இவ்விருபடங்களிலும் ஒரு heterosexual உறவுக்குத் தடையாக ஒரு homosexual உறவு வருகிறது. ‘இப்படிக்குக் காதல்’ படத்தில் வருகிற ஸ்வேதா பாத்திரமும், ‘The Opposite’ படத்தின் தினேசும் எதிர்கொள்கிற சிக்கல், தங்களின் ஈர்ப்பை எப்படி வெளிக்காட்டுவது என்பதே. அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்கிற வழிமுறைகள் கடத்தல் மற்றும் வன்தொடர்தல். இதுதான் சிக்கல் இப்படங்களில். இரண்டுமே, வன்முறைகள். ஏற்கனவே பொதுச் சமூகத்தில் homosexuals பற்றியிருக்கக்கூடிய மோசமான கருத்துக்களை மீள வலியுறுத்துவதாயே இவ்விருபடங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது அவர்கள், நோயாளர்கள், மனநலம் குறைந்தவர்கள், காமுகர்கள் எனப் பலவாறான மோசமான நம்பிக்கைகள் நிலவும் சமூகமொன்றில் அவர்களை மனநலம் குறைந்தவர்களாயும், வன்முறை மிகுந்தவர்களாயும் காட்டுவதென்பது, மோசமான நோக்காகும். ரகு தினேசைக் கோபமாக முறைக்கிறார் (அல்லது கொல்கிறார்), அரவிந்தோ, ஸ்வேதாவைக் கன்னத்தில் அறைகிறார். இதன்மூலம் இயக்குனர்கள் சொல்லவருவது ‘Gays & Lesbians’ ஆகவிருப்பது தண்டனைக்குரியது என்றே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது. எவ்வளவு மோசமான ஒரு சித்தரிப்பு இது?

கவுதம் வாசுதேவ மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் வில்லன் இணையரான ‘அமுதன் – இளமாறனை’ முன்வைத்தும் இச்சிக்கல் தொடர்பான உரையாடல்கள் நிகழ்ந்திருந்தன. விளிம்பு நிலையர்கள் தொடர்ச்சியாக வில்லன்களாக்கப்படும் தமிழ்நாட்டின் வெகுசனச் சினிமாவில் அச்சித்தரிப்பு ஆச்சரியமல்ல. ஆனால், அச்சித்தரிப்பைத் தொடர்ந்து எழுந்த உரையாடல்கள் யார் கண்ணிலும் படாமற்போனமை கேடேயாம். இந்தக் கேட்டுக்குள், ‘ஏன் Gay இணைக்கு அமுதன், இளமாறன் எனச் சுத்தமான தமிழ்ப்பெயர்கள் வைத்தாய் என்றொரு ஒப்பாரிவேறு எழுந்ததை நினைவுகொள்வோம்.

எந்தவிதத்திலும் Gay & Lesbian வாழ்வுபற்றிய அக்கறையுமின்றி எடுக்கப்பட்ட இவ்விரு படங்களும் ரொறன்ரோ சர்வதேசக் குறும்படவிழாவிற் திரையிடப்பட்டமை மிகவும் சலிப்பூட்டுகிறது. 2011 இல் ‘The Opposite’ திரையிடப்பட்டபோது பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. மேற்படி திரைப்படம் Gay உறவையும் மோசமாகச் சித்தரித்திருந்ததையும், தற்பால் நாட்டமுள்ள தினேசின் பாத்திரத்தை வில்லத்தனமாக, அல்லது ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரக்க் காட்டியதிலிருந்த அபத்தத்தையும் பலர் சுட்டிக்காட்டியிருந்தார்கள். படைப்பாளியின் நண்பரொருவர் அது படைப்பாளியின் சுதந்திரம் என்றார். படைப்பு/கருத்துச் சுதந்திரம் என்பதை நாம் பிழையாக விளங்கிவைத்திருக்கிறோம் என்று தொடங்கிக் காத்திரமான வாதப்பிரதிவாதங்கள் அவ்வரங்கில் நிகழ்ந்தன. 8 வருடங்கள் கழித்து கிட்டத்தட்ட அதே தோரணை, அதே கருப்பொருளோடு வந்திருக்கிற ‘இப்படிக்குக் காதல்’ திரையிடப்படுகிறது. இக்குறும்படவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரதன் திரைத்துறையில் ஆர்வமுள்ளவர். நிறைய வாசிப்பவர். முற்போக்கான ஒரு செயற்பாட்டாளராகத் தன்னைத் தகவமைத்து வருபவர். இத்திரைப்பட்த்தை “ஒரு variation கிடைப்பதற்காகத் திரையிட்டோம்” என்றார் விழாமுடிவில். 2011 இற்கும் 2018 இற்கும் இடையில் ரதன் பெரிதாக மாறிவிடவில்லைப் போலும். Gay & Lesbian மாந்தரின் வாழ்வு, மதுவுக்குத் தொட்டுக்கொள்ளும் ஊறுகாயல்ல. இரத்தமும் சதையுமான வாழ்வு. அவ்வாழ்வு ‘Variation’ என்றால், சொல்வதற்கேதுமில்லை.

You 2

சுமதியின் ‘You 2’ மற்ற இரு படங்களைவிட மாறுபட்டு அல்லது மேம்பட்டு இருப்பது, அதன் உள்ளார்ந்த நோக்கில். இத்திரைப்படம் ‘homosexual’ உறவுகள் இயல்பானவையே எனக் காட்டமுயல்கிறது. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறது. இத்திரைப்படத்தில் அப்பெண்கள் இருவருக்குமிடையே உறவு முகிழ்கிற கணங்களும் காட்சிகளும் அழகானவை. முதன்முதலாகத் கணவனாற் கைவிடப்பட்ட நண்பர்மீது மற்றைய நண்பர் தன் ஈர்ப்பை வெளிப்படுத்த முயல்கிற காட்சியை உதாரணங்காட்டலாம். தலைசீவி விட்டுக்கொண்டிருக்கிற ஒரு தருணத்தில் ஒருவர் நெருங்க முயற்சிக்க, மற்றவர் சற்றே தயங்கி உதறிக்கொண்டு போய்விடுவார். அவருக்கும் ஈர்ப்பிருந்தபோதும், வெளிப்படுத்த மனத்தடை. அந்த மனத்தடைக்கான சமூகக் காரணங்கள், முன்னைய காட்சிகளில் நடக்கிற உரையாடல்களூடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். பின்னர், தோழமை காதலாகிற தருணங்களையும் எந்தவிதமான பாவனைகளுமின்றி மிகவும் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர். இந்தமட்டிலும் சுமதியின் ‘You 2’ தன் மையப்பேசுபொருளான ‘Gay & Lesbian’ உறவுகள் இயல்பானவையே என்பதை நேர்மையாகப் பேசிச் செல்கிறது.

இப்படத்தின் பிரச்சினை, இதன் முடிவுக் காட்சியே. எல்லா உறவுகளைப் போலவே  Gay & Lesbian உறவுகளிலும் குடும்ப உறவுகளின் அதிகாரச் சிக்கல்களும் வன்முறைகளும் உள்ளன. ஆனால், அவ்வதிகாரப்போக்கையும், வன்முறையையும் இப்படியான உறவுகள் இயல்பானவையே எனப் பேசவரும் படைப்பொன்றிற் கொண்டுவருதல் உவப்பானதல்ல. அதுவும் படத்தின் பெயர் தமிழில் பெயர்த்தாக் ‘நீயுமா?’ என்றிருக்கும். பட்த்தின் கடைசிக் காட்சியும் அதுவே. ‘நீயுமா?’ என்கிற கேள்வியோடே படம் முடிகிறது. இங்குதான் இயக்குனர் சறுக்குகிறார். இச்சிக்கல், heterosexual – homosexual உறவுகளை ஒரேதளத்தில் வைத்து நோக்குவதால் வருவது. இவை இரண்டும், ஒரே தளத்திலில்லை என்பதை நாம் முதலில் உணரவேண்டும். இதை நான் பாலுறவினை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லவில்லை. முதலில் நாம் heterosexual உறவுகளுக்கிருக்கிற சலுகைகளைக் கவனத்திற் கொள்ளவேண்டும். Heterosexual உறவுகள் சமூகத்தால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை. இன, மத, வர்க்க, சாதி வேறுபாட்டுச் சிக்கல்கள் இருக்கிறபோதும், இலகுவாக சமூக நீரோட்டத்தில் இணைந்துகொள்வதில் எந்தத் தடையையும் கொண்டவையல்ல. இப்படியான உறவுகளின் இயங்குநிலை மற்றும் அவற்றிலிருக்கிற நடைமுறைகளை, homosexual உறவுகளிற் பிரதிபண்ணி, homosexual உறவுகளை இயல்பானவை எனக்காட்டுவதென்பது கருத்தியல் ரீதியாகக் கேள்விக்குட்படுத்தப்படவேண்டும். இத்தவறு காரணமாகவே ‘You 2’ என்கிற சுமதியின் குறும்பட்த்தையும் Lesbian உறவுகள் பற்றி நேர்மறையாகச் சித்தரித்த படம் என்றே வகைப்படுத்த முடிகிறது.

இருந்தபோதும், பத்துப் பதினைந்து வருட்த்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட இக்குறும்படத்தைத் தாண்டக்கூடிய வகையிற்கூட இன்னும் தமிழில் Gay & Lesbian குறும்படங்கள் வரவில்லையென்பது அவலமே.

சிக்கல் எங்கிருக்கிறது?

சிக்கல் எம்மனைவரிடமும் இருக்கிறது. ‘Gay & Lesbian’ மாந்தர் மீதான அக்கறையென்பதும், அவர்களுக்காதரவான குரல்களாய் நாமிருப்பதென்பதும் பிழையன்று. ஆனால் ஏதோவொருகணத்தில் நாங்களே அவர்களின் குரல்களாக ஒலிக்கத்தொடங்குகிறோம். இது ‘Gay & Lesbian’ களுக்கு மட்டுமல்ல, எல்லா விளிம்புநிலை மாந்தர்களுக்கும் நிகழ்கிற ஒரு பெருந்துயர். அதனாற்தான் தமிழில் ‘Gay & Lesbian’ படங்களைத் தடைசெய்யவேண்டும் என்கிறேன். அதாவது, ‘Gay & Lesbian’ அல்லாதவர்களால் படைக்கப்படும் ‘Gay & Lesbian’ பாவனைப் படங்களை. எம் உடனடித் தேவை, விளிம்புநிலை மாந்தர்களுக்குரிய இடங்களை (Social Spaces) சலுகைகளையுடையோர் நிரப்பிக்கொள்ளாமலிருப்பது. அதற்கான முதலடி, எமது சலுகைகளை நாம் உணர்ந்துகொள்ளுவதிலும், அச்சலுகைகள் காரணமாக நாம் பெறும் நன்மைகளை ஒத்துக்கொள்ளுவதிலுமே இருக்கிறது. அதன்பின் நாம் அவர்களின் குரல்களாகவிருக்கமாட்டோம், ஆனாற் சேர்ந்து பயணிப்போம்.

‘Gay & Lesbian உறவென்பது பேரன்பிலிருந்து வருவதல்லவா?’ என்றார் ஒரு நண்பர். எல்லா உறவுகளுமே பேரன்பிலிருந்துதான் வரவேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ‘Pride Toronto இப்பத்தான் முடிஞ்சது. அதுக்கிடேல இந்தப் படத்தைப் போடுகிறான்கள். இவங்கள் என்னத்தை வாசிச்சு, என்னத்தை எழுதி’ என்றார் இன்னுமொருவர். Pride Parade என்னவிதமான அரசியலிலிருந்து எங்கு வந்து நிற்கிறது என்பதை யாராவது கவனத்திற் கொண்டோமாவென்றால், இல்லை என்பதே பதில். இதைச் சொல்வதற்காக முற்போக்கர்கள் என்மீது கோபம் கொள்ளலாம், அதுவும் நன்மைக்கே. Pride Parade என்பது இப்போது ஒரு அரசியல் இயக்கமல்ல. அது ஒரு கொண்டாட்டம். Toronto Pride Parade அண்மைய காலங்களில் வெளிப்படுத்திக ஆகப் பெரிய அரசியல் என இந்த வருடம் ரொறன்ரோ காவற்துறையினரைத் தமது கொண்டாட்டங்களிற் பங்குகொள்ள வேண்டாம் எனச் சொன்னதைச் சொல்லலாம். ஆனால் அதையே 2016 இல் Black Lives Matter சொன்னபோது, Pride Toronto  அமைப்பாளர்கள் தயக்கத்தோடு அணுகினார்கள். Bruce McArthur என்கிற தொடர் கொலையாளி பற்றிய விசாரணைகளில் காவற்துறையின் மெத்தனப் போக்குகண்டு இவ்வருடம் தம்நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள். ‘Black Lives Matter’  அமைப்பினர் பலகாலமாகவே காவற்றுறை விளிம்புநிலை மாந்தருக்கு எதிரானது என்று சொல்லிவருபவர்கள். அவர்கள் செய்வது, விளிம்புநிலை மாந்தருக்கான அரசியல். அது பேரன்பு. Pride Parade என்பது சமூகநிலையில் முன்னேறிய வெள்ளையினத்தவரின்/அல்லது தம்மை வெள்ளையர்களாகப் பாவிப்பவர்களின் கொண்டாட்டக்களமாகி நிறையக் காலம். மற்றவர்கள் ஓரமாக இணைந்துகொள்ளலாம். இதைத் தமிழ்ச்சமூகம் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். இல்லாவிடில் சேலையும் வேட்டியும் அணிந்து, குத்துப்பாட்டுப் போட்டுக்கொண்டு Pride Parade ல் அணிவகுக்கத் திட்டமிட்டிருக்கமாட்டோம். Pride Parade உங்கள் இன அடையாளங்களின் பெருமை பற்றியது அல்ல, அது முன்னொருகாலத்திற் தேவையாயிருந்த, இப்போது மீட்டெடுக்கப்படவேண்டிய அரசியற் செயற்பாடு.

Gay & Lesbian’ என்று நான் இக்கட்டுரையிற் பயன்படுத்திய சொல்லாடல் கூட நூறுவீதம் சரியானதல்ல. ஒவ்வொருவர் தம்மை ஒவ்வொருவிதமாக அடையாளப்படுத்தும்போது, எவ்வாறு அவர்களை அழைப்பது என்ற சிக்கல் எழுகிறது. தமிழில் ‘தற்பாலீர்ப்புடையோர்” என்கிற பதம் பாவனையிலிருந்தாலும், ‘Gay & Lesbian’ எனக் குறிப்பது ஓரளவுக்குச் சரியாகவிருக்கும் எனக் கருதியதாலேயே அவ்வாறு பாவித்திருக்கிறேன். மேலும் மீராபாரதி முதலான தொடர்ச்சியான செயற்பாட்டாளர்கள் கூட ‘ஒரு பாற் புணர்ச்சியாளர்கள்’ என எழுதுவதைக் கவனித்துமிருக்கிறேன். அவர்கள் ‘homosexual’ என்கிற சொற்பதத்துக்கு மாற்றாக ‘ஒரு பாற் புணர்ச்சியாளர்கள்’ என்று எழுதுமிடங்களில் அப்பாவனை முகஞ்சுழிக்க வைக்கிறது என்பதை உணர்த்தும்பொருட்டு, heterosexual என்பதற்குப் பதிலாக ‘குறி-யோனிப் புணர்ச்சியாளர்கள்’ என்றோ அல்லது அதற்கீடான சொற்களையோ பாவிப்பதை நாம் வேண்டுமென்றே ஒரு செயற்பாடாகச் செய்யவேண்டும் எனவும் எண்ணுகிறேன்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s