எஸ். போஸின் கவிதைகளை முன்வைத்து

அறிமுகம்

சிலநாட்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்றில் சந்தித்த போது எஸ். போஸின் படைப்புகளின் தொகுப்பு நூலின் அறிமுகக்கூட்டத்தில் பேச முடியுமாவென அகிலன் கேட்டுக்கொண்டார். நான் வாசிப்பதையும் எழுதுவதையும் குறைத்துக்கொண்டு நிறைய நாளாயிற்று. 2009 இல் உலகத்தைத் திருத்தப் பகீரதப் பிரயத்தனஞ் செய்துகொண்டிருந்த காலத்தில் அருண்மொழிவர்மன் மூலமாக தொரன்ரோ இலக்கியச் சூழலுக்கு அறிமுகமானபோது நான் பங்கெடுத்த முதல்நிகழ்வு வடலியின் “மரணத்தின் வாசனை” மற்றும் “பலியாடு” ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா. அன்றிலிருந்து நிறைய அறிமுகங்கள், நிறையச் சண்டைகள், நிறைய ஏமாற்றங்கள், கடைசியாக அச்சூழலை விட்டு விலகியபின் நிறைய மகிழ்ச்சி என்று வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறபோது அகிலன் இந்த வேண்டுகோளை வைத்தார். அகிலனுக்கு முடியாது என்று சொல்ல முடியவில்லை. பார்க்கலாமென்றேன். வேண்டுகோளுக்குப் பின்னர் அகிலன் என்னைத் தொடர்பு கொள்ளவேயில்லை. இது எனக்குப் புதிதுமில்லை. ஒரு தலையிடி குறைந்தது என்று மகிழ்ந்திருந்தபோது, திடீரென்றழைத்து சித்திரையில் நிகழ்வு செய்கிறோம் பேசுவீர்கள்தானேயென்றார். எதைப் பேசவென்று கேட்டபோது எஸ்.போஸின் கவிதைகளைப் பற்றியும், நேர்காணல்களைப் பற்றியும், சிறுகதைகளைப் பற்றியும், விமர்சனக் கட்டுரைகளைப் பற்றியும் உரைகள் இடம்பெறவிருப்பதாயும், உங்களுக்கும் கவிதைகளுக்கும் ஒத்துவராதென்பதால் நீங்கள் வேறு எதைப்பற்றியாவது பேசுங்கள் என்றார். “இல்லை அகிலன், கவிதைகளை முன்வைத்துக் கொஞ்சமாகக் கதைக்கிறேன்” என்றேன்.

சொன்னது சொல்லியாயிற்று. கவிதைகளை முன்வைத்து எதைப் பேச? கவிதைகளுக்கும் எனக்குமான உறவு கொஞ்சம் சிக்கலானது. 1970 களில் கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா பின்வருமாறு எழுதினார். “அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்குக் குரங்குச் சின்னத்தைப் பரிசளிக்கலாமா?” என்பதை ஐந்து வரியில் அச்சடித்துக் கவிதையென்று பிரசுரிக்கிறார்கள் என்று. 40 வருடங்களுக்குப் பின்னரும் மேற்படியான கவிஞர்களைத்தாண்டித்தான் நல்ல அனுபவமொன்றைத் தரக்கூடிய கவிதைகளைக் கண்டுகொள்ளக்கூடியதாயிருக்கிறது. அதே சுஜாதா ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைவிட ஈழத்திலிருந்து ஆழமான கவிதைகள் வருகின்றனவே என்ற கேள்விக்கு “ஈழத்திலிருந்து நல்ல கவிதைகள் வருவதற்கு அவர்களின் வாழ்க்கையின் பாடுகளே காரணம். தமிழ்நாட்டுக் கவிஞர்களுக்கு அப்படியில்லை. அதனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே குதிரையோட்டுகிறார்கள்” என்று பதில் சொன்னார். என் செய்ய, ஈழத்துக் கவிஞர்களும் அதே நிலைக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. “பெண்களுக்காவது கவிதை பாட மாதவிடாயிருக்கிறது. எங்களுக்கு என்ன இருக்கிறது?” என ஏங்குகிறார்கள் சில தம்பிகள். இவர்களுக்காகவே திரும்பவும் யுத்தத்தை ஆரம்பிக்கமுடியுமா என்ன?

கவிதைகளை முன்வைத்துச் செய்யப்படுகிற பல பகிர்வுகள் “பரிமேலழகர் உரை”களாக இருப்பது இன்னொரு பிரச்சினை. கவிதைகளிலிருக்கிற படிமங்களையோ, அல்லது ஒரு அரங்க நிகழ்வு தன்னகத்தே கொண்டிருக்கிற படிமங்களையோ ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரித்தான் விளங்கிக்கொள்ளமுடியும். அவற்றுக்குப் பொழிப்புரை எழுதப்படும்போது, அக்கவிதை அல்லது அவ்வாற்றுகை மீதான பன்முக வாசிப்புக்கான சாத்தியங்கள் செத்துப்போகின்றன என்பது என் கருத்து. “காவிநிறம் நெருப்பின் நிறம்; அதை ஆன்மீகத்தின் நிறமாகப் புரிந்துகொள்வது எனது தவறா பார்வையாளரின் தவறா” என்றெல்லாம் வாதிடமுடியாது. இரு பக்கமும் தவறில்லை எனலாம். கவிதைகளை உரத்து வாசிப்பதிலும் இதே சிக்கலிருக்கிறது. ஒரு கவிதை உரத்து வாசிக்கப்படும்போது, வாசிப்பவரின் கருத்துக்களைக் காவிக்கொண்டே அக்கவிதை புறவெளிக்கு வருவதாய் நான் உணர்கிறேன். அதற்கான அண்மைக்கால உதாரணமாகப் போனவருடம் யோர்க் பல்கலைக்கழகத்தினதும் மார்க்கம் நகரசபையினதும் கூட்டு ஏற்பாட்டில் நிகழ்ந்த கவிதை வாசிப்பு நிகழ்வைச்சொல்லலாம். யாழினி, பா. அகிலன் போன்றோர் தமது கவிதைகளை வாசித்தபோது, அவர்களின் குரலாக அந்தக் கவிதைகள் வெளிவந்தபோதும், நெகிழ்வான அனுபவங்களைத் தந்தன. ஜெயபாலன் தன்னுடைய “என் கதை” என்ற கவிதையை வாசித்தார். அன்றுவரைக்கும் மிகப்பிடித்ததாயிருந்த அந்தக் கவிதையைத் தன்னுடைய புதிய சினிமா அவதாரத்து அங்கசேட்டைகளோடு வாசித்தார். அன்றிலிருந்து உலகின் மகா மட்டமான, வக்கிரமான கவிதையொன்றை ஆராதித்துக்கொண்டிருந்தோம் என்று மனதில் நெருடல். இப்போதெல்லாம் அந்தக் கவிதையை வாசிக்க முடிவதில்லை. வாசித்தால் “மெட்ராஸ்” படத்தில் காவுவாங்கிச் சுவரில் வரையப்பட்ட அந்தக் கொடுஞ்சிரிப்போடு ஜெயபாலனின் முகம் மட்டுமே நிழலாடுகிறது. விழுதுகளை நிலத்தேயூன்றிய அப்பேராலமரமும் பறவைகளுமல்ல.

ஆக, எஸ். போஸின் கவிதைகளை வாசித்துக்காட்டிப் பொருள்கூறவும் என்மனம் ஒப்பாது. மேலும், எஸ். போஸின் கவிதைகள் அப்படியான பொருள்கூறலுக்கான தேவையை வேண்டிநிற்பவை அல்ல. ஆதலால், அவரின் கவிதைகளின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கிற ஒரு இழை மற்றும் அவரின் மரணம், இவை எனது மனதிலேற்படுத்திய சலனங்களைப் பற்றிப் பேசலாமென்றிருக்கிறேன்.

அவனைப் பேசவிடுங்கள்..

எங்கள் வீட்டிலிருந்து உடுப்பிட்டி செல்கிற வீதி (அல்லது 751 வீதியென்று சொன்னால் இலகுவாக விளங்கும்) கொற்றாவத்தைக்குப் போகிற சிறுவீதியைச் சந்திக்கிற இடத்திற்கு அருகாமையில் அவர்வீடு இருந்தது. ஆரம்ப ஆங்கிலத்தை அவரிடந்தான் படித்தேன், கேம்பிரிட்ஜ் கலாசாலையில். I, O, N, P, N, K என்பதை வேகமாகச் சொன்னால் ஐயோ என் பீ எங்கே? என்பதாக வெளிவரும் என்பதைச் சொல்லித்தந்தவர். இதெல்லாம் சொல்லித்தருகிறாரே என்ற நம்பிக்கையில் பானை வயிறுடன் ஒரு உடம்பையும், மிகச் சிறிதாக ஒரு தலையையும் அதனிலும் சிறிதாக ஒரு ஆண்குறியையும் வரைந்து, அந்த உருவத்துக்கு “செந்தில்” என்று பெயர்வைத்து, ஆண்குறியை அம்புக்குறியால் குறித்து “குஞ்சாமணி=கவுண்டமணி” என்று எழுதிவைக்க, பக்கத்திலிருந்த பொடியன் கெக்கட்டம்விட்டுச் சிரித்துவைத்தான். ஓடோடிவந்த அவர் தடிமுறிய அடித்துவிட்டு தங்கவேலரிடம் அனுப்பி வைக்க அவருடைய இரண்டு பிரம்புகள் நாசமாய்ப்போயின. ஒரு பெருஞ்சித்திரக்காரன் முளைக்க முன்னமே கருகிப்போனான்.  ரத்தினாதேவிக்கும், சிந்துவுக்கும் படங்காட்ட காற்சயிக்கிளை வேகமாய் மிதித்துப்போய் கவிழ்ந்து வீழ்ந்தது அவர் வீட்டுக்கு முன்னாலேதான். அவர் வீட்டுக்கு முன்னால் எப்போதும் கூடிநிற்கிற பெரியண்ணாக்கள் “தம்பி, உதுக்கு இன்னும் காலமிருக்கடா” என்றதும், ரத்தினாதேவி சிரித்ததும் ஞாபகமிருக்கிறது. அவர் என் வீழ்ச்சியையும் தங்கவேலரிடம் சொல்லிவிட்டார், அதற்கும் அடி. “What’s the time Mr.Wolf” விளையாடியபோது நான் பிடித்தது ஒரு பெண்பிள்ளையை. பொடியள் அந்தப் பெண்பிள்ளையை எனக்குப் பட்டம் தெளிக்கிறோம் என்று சொல்லி, ஆங்கிலப்பாடக் கொப்பியின் பின்பக்கத்தில் K.S என்று ஒரு இதயத்துக்கு நடுவே எழுதிவிட்டார்கள். அதற்கும் அடி. “உந்த மனிசிட புருசன் பாவமடா. கிழமைக்கு 5 மணித்தியாலம் கழியிறதே எங்களுக்கு பயங்கரமா இருக்கு. அந்தாள் வாழ்க்கை முழுக்க உவாவோட காலம் தள்ளோணுமெல்லே” என்றேன் சிறிகாந்தன் (அ) சிறிமாவோ பண்டீரிநிக்கா எனவும் அழைக்கப்படுகிற பண்டியிடம். “உனக்கென்ன விசரே. அந்த மனுசனை அண்ணையவை போட்டுக் கனகாலமாச்சு” என்றான் அவன். “அவ எங்களுக்குச் செய்யிற கொடுமைக்கு உதுவும் வேணும் உதைவிடக் கூடவும் வேணும்” என்று நினைத்துக்கொண்டேன்

அவரின் கணவரை “காட்டிக்கொடுக்கிற கயவர்” என்று சொல்லிப் பொடியள் முடித்தார்களென்று எங்களூரவர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். அந்த விட்டின் பிள்ளையோ சிதழூறும் காயங்களின் மொழியில் பேசிக்கொண்டிருந்தான்.

இன்னும் சேகரிக்கப்படாத சித்தப்பாவின் சிதறிய கேசம்..

751 வீதியிலிருந்து மேற்சொன்னவரின் வீட்டுக்குப் பக்கத்தால் வடக்கே போகும் சிறுவீதி கொற்றாவத்தைக்குப் போகும். அதில் வருகிற முதற் பெரியசந்தி சாணாந்தைச் சந்தி. அச்சந்தியின் கிழக்கே போகும் ஒழுங்கையின் இடதுபுறத்தே இருக்கும் நான்காவதோ ஐந்தாவதோ வீடு கப்பியலுடையது. கப்பியல் என்னோடு நேசரியிலிருந்து படித்தவன். அப்போது சூத்தைப் பல்லோடும், அழுக்கான உடுப்புகளோடுந்தான் அவனை எனக்குத் தெரியும். ஐந்தாம் வகுப்பில் அவனை “வேசமோனே” என்று திட்டியதற்காக அதிபரிடஞ்சொல்லி அடிவாங்கித்தந்தான். அப்போதெல்லாம் அவனை எனக்குப் பிடிப்பதேயில்லை. நிறையத்தரம் கோபம் எல்லாம் போட்டிருக்கிறோம். எப்போது நெருக்கமாகிப்போனான் என்பது ஞாபகமில்லை. என் பதின்மங்களின் பெரும்பகுதி அவனோடுதான் செலவாகிற்று. ஒரு தம்பி, இரு தங்கைகள், அம்மா, சித்தி என பாதி ஓலையாலும் மீதி ஓட்டாலும் கூரை வேயப்பட்ட வீடொன்றிற்றான் குடியிருந்தான். அப்பா மத்தியகிழக்குக்கு உழைக்கப்போயிருந்தார். அம்மாவுஞ் சித்தியிம் பலகாரஞ் சுடுவார்கள். கப்பியலும் தம்பியும் அதைத் தேநீர்க்கடைகளுக்கு விநியோகிப்பார்கள். நல்ல திறமைசாலி. அதிவேக ஓட்டக்காரன். அழகன். நானும் இவனும் சரவணமுத்தரிடம் ஆங்கிலம் படிப்பதாகச் சொல்லி ஒரு கிரிக்கெட் ரீமைக் கட்டியெழுப்பினோம். அணியின் பெயர் “மின்னல்”. எங்கள் களம் “கொக்கோ வெட்டை” அவனது வீட்டிற்தான் எமது அணியின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இயங்கியது. அவன்வீட்டுப் படலையடியில் நின்றுகொண்டு “அண்ணை, மச்சடிப்பமே” என்று கேட்டுத்தான் நிறையப் போட்டிகளை ஒழுங்குசெய்திருக்கிறோம். முக்கியமாகச் சக்கலாவத்தை வைரவர் கோயிலடிப் பொடியங்களுடன்தான் அடிக்கடி விளையாடுவோம், கொஞ்சக் காலத்துக்கு முன்னர் முரளிதரனுக்கு எப்போதெல்லாம் விக்கெட்டுகள் தேவையோ அப்போதெல்லாம் இலங்கை அணி ஸிம்பாப்வேக்கும், பங்களாதேசுக்கும் போய் விளையாடுமே, அப்படி.

கப்பியலின் சித்தப்பாவை இரண்டொருமுறைதான் பார்த்திருக்கிறேன். ஒல்லியான மனிதர். மீசை இருந்ததாக ஞாபகம். தலையை மேவி இழுத்திருப்பார். கொஞ்சம் செம்பட்டை முடி. அவரின் பிழைப்பு தெற்கிலெங்கோ லொறி ஓட்டுவது என்று கேள்விப்பட்டதுண்டு. ஒருநாள் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து மண்டையில் போட்டார்கள். “லொறி ஓட்டிறன் எண்டு சொல்லி ஆமிக்கு றெக்கி எடுத்தவராம். அதுதான் ஆளைப் போட்டிட்டாங்கள்” என்று ஊர் பேசிக்கொண்டது. அவரது செத்தவீட்டுக்கு நெருங்கிய சொந்தங்களைத்தவிர யாருமே போகவில்லை. “எணேய், அந்தாளின்ர செம்பட்டத் தலமயிர் அங்கையிங்க பறக்கிற மாதிரியிருக்கணை” என்றேன் பெரியம்மாவிடம். “விசரா மகன் உனக்கு, அங்க பக்கத்தில தங்கராசு வெட்டிற மயிராயிருக்கும்” என்றார் அவர். அவருக்கும் தெரியும், எங்களூரில் கப்பியலின் சித்தப்பாவளவுக்குச் செம்பட்டைமுடி வேறாருக்குமில்லை என்பது.

மண்ணும் மரணவெளியும்..

எங்கள் பள்ளிக்கூடத்தின் prefect நியமனம் என்பது ஒரு தனி அரசியல். அதுவும் பெரிய பள்ளிக்கூடத்து நியமன அரசியலென்பது பெருஞ் சீத்துவக்கேடு. நாங்கள் ஹாட்லியர்கள் வேறு. கொம்பு முளைத்தவர்கள். 2003 இல் நாங்கள் junior prefect களாக நியமிக்கப்பட்டபோது இவனது நியமனம் சர்ச்சைக்குரியதாய் இருந்தது. முதலில் கலைப்பிரிவிலிருந்தெல்லாம் prefect நியமிக்கப்படுவதே பெருங்கொம்பு முளைத்த கணித, மருத்துவப் பிரிவு மாணவர்களுக்குச் செய்யப்படும் அநியாயம். இதற்குள் இவன் உயர்கல்விக்காக 11ம் தரத்திலோ, 10ம் தரத்திலோதான் ஹாட்லிக்கே வந்திருந்தான். ஆறாம் வகுப்புமுதல் படிக்கிற நிறையப்பேர் இருக்கத்தக்கதாக இடையில் வந்தவன் எப்படி மாணவர் தலைவனாகலாம் என்று நாங்கள் எங்களுக்குள் குசுகுசுத்ததுண்டு. இப்படியான மாணவர் தலைவர்களின் தலைவனாக இருந்தவனுக்கு மேற்படி அரசியலில் விருப்பேதுமில்லாமல் இருந்தகாரணத்தால் அந்த எதிர்ப்பு குசுகுசுப்போடே அடங்கிப்போனது. இவன் விஞ்ஞானம் அல்லாத பிரிவில் படித்ததுதான் இவனுக்கிருந்த ஒரே தகுதி என்று நக்கல் செய்துமிருக்கிறோம்.  விஞ்ஞானம் படித்த எங்கள் விண்ணாணம் தெரியவந்தபோது எந்த மூஞ்சையை வைத்து நக்கல் செய்தீர்கள் என்று இவன் கேட்டிருக்கலாம், கேட்கவில்லை. இப்போது இவன்கூட விஞ்ஞானம்தான் படித்தானோ என்கிற மாதிரி ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால், இவனுக்கும் எனக்குமான நெருக்கம், இவ்வளவுதான்.

இவனை ஒருநாள் குடத்தனையில் சொந்த வீட்டு வாசலில் வைத்து இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றார்கள். இவனது மரணத்துக்கு ஆயிரங்காரணம் சொன்னார்கள். இவன் முன்னைநாள் போராளி என்கிறார்கள் சிலர். இல்லையில்லை இவனது அண்ணனே போராளி என்கிறார்கள் வேறு சிலர். இவன் ஒரு சூழல் பாதுகாப்புச் சம்பந்தமான நடவடிக்கைகளில் நாட்டமுடையவன் என்கிறார்கள் இன்னும் சிலர். ‘இலங்கையில இருந்துகொண்டு கையில கார்த்திகைப் பூவோட படம் போடுறது கொழுப்புத்தானே’ என்கிறார்கள் மற்றவர்கள். இன்னும் உள்ளேயிறங்கி விசாரித்தால் “மத்தியிற் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” எனக்கீதமிசைக்கும் வீணைக் கலைஞர்களின் பிழைப்பில் மண்ணைப்போட முயன்றதாற்றான் அநியாயமாய்ச் செத்தான் என்கிறார்கள். வீணைக் கலைஞர்தம் பிழைப்பே மண்ணள்ளுவதாக இருக்கும்ப்போது இவன் எப்படிப் பிழைப்பில் மண்ணை போட்டான் என்பதெனக்கு விளங்கவில்லை. எல்லாம்வல்ல வல்லிபுரமுறையும் ரங்கனுக்கே அது வெளிச்சம். அவன் கொல்லப்பட்டதற்கான காரணங்களேதென யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. வீட்டுப்படலையில் பெயரைச் சொல்லிக்கூப்பிட்டு அவனைச் சுட்டுக்கொன்றார்கள், அவனும் அந்த இடத்திலேயே செத்துப்போனான் என்பது மட்டும் உண்மை.

பிரயாணங்களின்போது கண்டெடுக்கப்பட்ட மிருகம்..

இவன் செத்த சில நாட்களில் அவரும் செத்துப்போனார். அவரை நாங்கள் லெப்பை என்றழைப்போம். March Past இன் போது தாமோதரம் இல்லத்துக்குத் தலைமையேற்றிருந்தார். Left Right Left என்பதை உரத்த குரலில் “லெப்பை லெப்” என்று சொல்லுவதால் அவருக்கு நாங்கள் “லெப்பை” என்கிற பட்டமளித்திருந்தோம். லெப்பை எங்களை அணிநடை பழக்கியபோது எங்களை நாயடி பேயடி அடித்ததுண்டு. ”சனியனுக்குத் திருப்பிக்குடுக்கோணும் ஒருநாளைக்கு” என்று கறுவிக்கொண்டதுண்டு. ஆனாலும் அணிநடையின்போது தன் பெரும்புட்டமசைய லெப்பை நடக்கிற நடையைப் பார்த்தே அந்தக் கோபமெல்லாம் போய்விடும். கடும் வெயிலுக்குள் ஜூஸ் தரும்போது “உங்கட நன்மைக்குத்தானேடா அடிக்கிறன்” என்பார் லெப்பை. ”ஓமண்ணை, ஏ.எல் முடிஞ்சோண்ணை முதல் வேலை march past அடிக்கிறதுதான். சுத்தம் சோறுபோடும் March Past மரக்கறி போடும்”. லெப்பை சிரிப்பார். எனக்கு அவர் உண்மையிலேயே march past மரக்கறி போடுமென்று நம்பினார் என்றொரு சந்தேகமுண்டு. அவ்வளவு அழுத்தம் கொடுப்பார்.

பாடசாலைக்காலத்துக்குப் பிறகு லெப்பை march past க்குப் பதிலாக வீணை வாசிக்கக் கற்றுகொண்டார். முன்னவன் செத்தபின்னர் லெப்பை சுதிதவறி வீணை வாசித்தாரென்று சொல்லக்கேள்வி. முன்னவனின் மரணத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க லெப்பை ஆனமட்டும் முயன்றார். அவரைச் சுதிசேர வாசிக்கவைக்க மற்ற வீணைக்கலைஞர்கள் முயன்றார்கள். அதிபரொருவரை விட்டுப் பயிற்சியெல்லாம் கொடுத்தார்கள். லெப்பை கேட்டிலர். ஆனைவிழுந்தான் பகுதியில் ஒருநாள் ஆனைக்குப் பதிலாக லெப்பை விழுந்துகிடந்தார். முதலில் அவரைச் சுட்டுப்போட்டதாகச் சொன்னார்கள், பிறகு விபத்தென்றார்கள்.

லெப்பை தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போன பகுதி இவ்வாறான பாரிய விபத்துகள் நிகழும் பகுதியல்ல. அப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததுக்கான எந்த அறிகுறியும் அவர் விழுந்துகிடந்த இடத்தில் இருக்கவில்லை. அவரது மோட்டார் சைக்கிளிலும் சரிந்து விழுந்தால் நிகழக்கூடிய சேதம் மட்டுமே நிகழ்ந்திருந்தது. அவரது மண்டையில் மரணம் சம்பவிக்கும்படிக்கு ஒரு அடி. பிரேத பரிசோதனை செய்த பதில் நீதவான் இது விபத்தல்ல, சந்தேகத்துக்கிடமான மரணம். காவற்றுறை மேலதிக விசாரணைக்கு ஆவன செய்கவென்றார். வீணையிசையின் மேன்மையில் மயங்கி அவர்கள் “விபத்து” என்று கோப்புகளில் எழுதிவைத்தார்கள். இன்னுஞ்சிலரோ முதன்மை வீணை வித்துவானின் எளிமை பற்றியும், ஒரு போராட்டக்குழுவாக ஆரம்பித்து இன்றைக்கு ஜனநாயக முறையில் மற்ற வீணை வித்துவான்களை வழிநடத்தும் அவரின் பெருந்திறமை பற்றியும் வாழ்த்துப்பாக்களை யாத்தார்கள்.

கனவுகளின் அழுகையொலி..

எஸ். போஸின் கவிதைகளைப் பற்றிப் பேசச்சொன்னால் இவன் வேறேதோவெல்லாம் அலம்புகிறானே என்று நீங்கள் யோசிக்கக்கூடும். ஆனால் நண்பர்களே நான், எஸ். போஸின் கவிதைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். மேற்படி மனிதர்களைப் போலத்தான்  எஸ். போஸும் ஒரு நாட் செத்துப்போகவைக்கப்பட்டார். அவரக் கொன்றவர்கள் இனந்தெரியாதவர்கள் இல்லையென்பதும் எம்மனைவருக்குந்தெரியும்.

எஸ். போஸின் சாவையோ, அல்லது நான் மேற்சொன்ன மனிதர்களின் சாவையோ பற்றிப் பேசுவதற்கான அருகதை எனக்கிருக்கிறதா என்ன? அல்லது இந்தச் சாவுகளைப் பற்றிப் பேச உங்களுக்குத்தான் அருகதையிருக்கிறதா? நான் என்பது புலி சார்ந்த பக்கம், நீங்கள் என்பது புலி சாராத பக்கம்.  “A” அல்லது  “A அல்லாதது”. நண்பர்காள், நான் மேற்சொன்ன நான்கு சாவுகளில் இரண்டு சாவுகளை நான் நியாயப்படுத்தியிருக்கிறேன். இரண்டு சாவுகளை நீங்கள் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். சுருக்கமாகச் சொன்னால் மேலே சொன்ன நான்கு சாவுகளையும் ஏதோவொரு கட்டத்தின் ஏதோவொரு காரணத்துக்காக நானும் நீங்களுமாகிய நாங்கள் நியாயப்படுத்தியிருக்கிறோம். இன்றைக்குச் சடாரென்று எஸ்.போஸின் கவிதைகளையும் அவரின் சாவையும்பற்றிப் பேசக்கூடியிருக்கிறோம். செத்துப்போன நா. முத்துக்குமார் ஒரு சினிமாப்பாட்டில் பாடிப்போன மாதிரி, இன்றைக்கு நாங்கள் ஜனநாயகவாதி முகத்தை மாட்டவேண்டும். சரி, மாட்டிக்கொள்வோம்.

எங்களைப் பேசவிடுங்கள்..

எஸ்.போஸின் கவிதைகளின் அடிநாதமாயொலித்துக்கொண்டிருப்பது எங்களைப் பேசவிடுங்கள் என்கிற குரலே. அந்தக் குரலுக்காகத்தான் அவரது குரல்வளை அறுக்கப்பட்டது நண்பர்களே. குறித்த காலகட்டத்தில் யார்கை ஓங்கியிருக்கிறதோ, அவர்களை நோக்கி இக்குரலெழுப்பும் அனைவருக்கும் இதேதான் கதியாயிற்று. என்ன, மின்கம்பத்தில் கட்டி மண்டையிற் போட்டால் “புலி”, அஃதிலாவிடத்து “இனந்தெரியா ஆயுததாரிகள்”.என்னவொரு சீத்துவக்கேடு இது? அப்படிக் குரல்வளைகளை நெரித்தவரோடும், நெரிக்கின்றவரோடும் செயற்பாட்டுரீதியிற் சேர்ந்திருக்கக்கூடியவர்களின் முன்னுரையோடு நெரிபட்டவர்களின் படைப்புக்கள் வருவதென்பது காலம் எங்களுக்கு ஓட்டிக்காட்டும் குரூர நகைச்சுவைத் திரைப்படம். கொலைகாரர்கள், சீரிய அரசியல்வாதிகள், ஏமாற்றுக்காரர்கள், அவதூறாளிகள், பாலியற்றாக்குதல் செய்பவர்கள் கூட“எங்களைப் பேசவிடுங்கள்” என்று உயர்ந்த குரலில் அதட்டுமளவுக்கு இடங்கொடுத்த சனநாயகவாதிகளான நாங்கள், அடிப்படை நியாயத்தோடு எழுங்குரல்களுக்கான வெளியை இவ்வளவு மரணங்களின் பின்னரும் உருவாக்கிக்கொடுக்கவில்லை என்பது எம் காலத்தின் வெட்கக்கேடு. இந்த இனந்தெரியாத இனந்தெரிந்தவர்களை இயலுமானளவுக்கு அடையாளப்படுத்துவது அந்தக் கனவுகளின் குரல்களுக்கு ஓரளவுக்காவது நாம் செவிமடுத்தோம் என்கிற நிறைவைத் தரலாம். செத்த சனத்தைக்காட்டிப் பிழைத்த இந்த வாழ்வின் முடிவில் கொஞ்சம் குறையக் குற்றவுணர்ச்சியோடு செத்துப்போகலாம்.

எஸ். போஸின் கவிதைகளைப் பற்றிப் பேச என்னால் முடிந்ததென்பது “எங்களைப் பேசவிடுங்கள்” என்கிற தீனமானகுரலிற் அந்தக் கனவுகளின் குரல்கள் பற்றி மட்டுமே.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s