சேர். காரி சோபெர்ஸ் (Sir. Garfield Sobers)–தொடர்ச்சி
சோபெர்ஸ் ஆரம்பகாலத்தில் ஒரு பந்துவீச்சாளராயும், கீழ்வரிசைத் துடுப்பாட்ட வீரராயும் செயற்பட்டகாலத்திலேயே, அவர் முன்வரிசைத் துடுப்பாட்டவீரராகச் சிறப்பாகச் செயற்படுவார் என அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் கீத் மில்லர் கணித்திருந்தார். அந்தக் கணிப்பை மெய்யாக்கிய தொடர் 1958 இல் பாகிஸ்தானுக்கெதிரான தொடர்.
ப்ரிட்ஜ்ரவுனில் நடைபெற்ற முதற்போட்டியில் சோபெர்ஸ் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். எவேர்ட்டன் வீக்ஸ் 197 ஓட்டங்களையும் கொன்ராட் ஹன்ரே 140 ஓட்டங்களையும் குவிக்க, முதல் ஆட்டவாய்ப்பில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 9 இலக்குகளை இழந்து 579 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. பதிலளித்து ஆடிய பாகிஸ்தான் முதல் ஆட்டவாய்ப்பில் வெறும் 106 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவது முறையும் தொடர்ந்து ஆடுமாறு பணிக்கப்பட்டது. இரண்டாவது ஆட்டவாய்ப்பில் ஹனிஃப் மொகம்மட் 337 ஓட்டங்களை 16 மணித்தியாலங்களுக்கு மேல் (970 நிமிடங்கள்) களத்தில் நின்று பெற்றுப், போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள வழிகோலினார்.
ட்ரினிடாட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் அணி 120 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தன்வசமாக்கிக்கொண்டது. சோபெர்ஸ் முதல் ஆட்டவாய்ப்பில் 52 ஓட்டங்களையும், இரண்டாவது ஆட்டவாய்ப்பில் 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ரோய் கில்கிறிஸ்ட் 7 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
ஜமேய்க்காவில் நடைபெற்ற மூன்றாவது போட்டிதான் “திறமையாளர் சோபெர்ஸ்” “சாதனையாளர் சோபெர்ஸ்” என மாறிய போட்டி. பாகிஸ்தான் அணி முதலிற்துடுப்பெடுத்தாடிப் பெற்ற 328 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி வெறும் 3 இலக்குகளை மட்டுமே இழந்து 790 ஓட்டங்களைக் குவித்தது. சோபெர்ஸ் ஆட்டமிழக்காமற் குவித்த 365 ஓட்டங்களின்மூலம் பின்வரும் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன:
- தனிவீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்கள் (முன்னைய சாதனை: 364-லென் ஹட்டன் 1938 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா)
- 260 ஓட்டங்களைப் பெற்ற கொன்ராட் ஹன்ரேயுடன் அதிகூடிய இணைப்பாட்டத்துக்கான இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள்: 446 – (அப்போதைய சாதனை: 451 ஓட்டங்கள், டொன் ப்ராட்மன் மற்றும் பில் பொன்ஸ்ஃபோர்ட், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து 1934)
- மிக இளைய வீரர் ஒருவராற் பெறப்பட்ட முச்சதப் பெறுதி. அப்போது சோபெர்சுக்கு வயது 21 ஆண்டுகள் 216 நாட்கள். இன்றுவரை அவரைவிட இளையவர் ஒருவரால் முச்சதமொன்று பெறப்படவில்லை
- மிக இளைய வீரர் ஒருவராற் பெறப்பட்ட அதுகூடிய தனிநபர்ப் பெறுதி
- அதிபெரிய முதற்சதம்
- அதிககாலம் நிலைத்து நின்ற தனிநபர்த் துடுப்பாட்டச் சாதனை- 1993-94 பருவகாலம் வரை 35 ஆண்டுகள் நிலைத்திருந்த சாதனை.
- அதிகூடிய ஓட்டப்பெறுதியைப் பெற்ற ஆங்கிலேயர் மற்றும் அவுஸ்திரேலியரல்லாத முதற் துடுப்பாட்டக்காரர்.
அந்தப் போட்டியை மேற்கிந்தியத்தீவுகள் இலகுவாக வெற்றிகொண்டார்கள். அதற்கடுத்த போட்டியில் சோபெர்ஸ் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார். இந்தப் போட்டித்தொடரில் மொத்தமாக 8 ஆட்டவாய்ப்புகளில் 3 சதங்கள் அடங்கலாக 824 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட சோபெர்ஸ் அதன் பின்னர் எல்லாத்தொடர்களிலும் சிறப்பாகச் செயற்படலானார்.
1958-59 இல் இந்தியாவுக்கெதிராக இந்தியாவில் 3 சதங்களுட்பட 557 ஓட்டங்கள், 1959 இல் இங்கிலாந்துக்கெதிராக 709 ஓட்டங்கள் (3 சதங்கள்), 1960-61 இல் அவுஸ்திரேலியாவுக்கெதிராக இரு சதங்கள் உட்பட 430 ஓட்டங்கள் என அவரின் சிறப்பான துடுப்பாட்டம் வெளிப்பட்டது. அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் அவர் 15 இலக்குகளை வீழ்த்தியதோடு, 12 பிடிகளையும் எடுத்ததன் மூலம் உலகின் முதற்தரச் சகலதுறை ஆட்டக்காரராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அவரது சிறப்பான ஆட்டத்தைப் பார்த்த டொன் ப்ராட்மன் தெற்கவுஸ்திரேலியப் பிராந்திய அணிக்கு விளையாடுவதற்காக அவரை அழைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
1964-65 பருவகாலத்தில் அப்போது மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவராக இருந்த ஃப்ராங் வொரெல் தமது ஓய்வை அறிவித்தபோது மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைமைப்பதவிக்கான ஒரே தெரிவாக காரி சோபெர்ஸ் இருந்தார். ஃப்ராங் வொரெலைக் கௌரவிக்கும் முகமாக அவரது பெயரில் நடத்தப்பட்ட முதலாவது அவுஸ்திரேலியா- மேற்கிந்தியத்தீவுகள் தொடர் சோபெர்சின் தலைமையில் மேற்கிந்தியத்தீவுகள் விளையாடிய முதற்தொடராக அமைந்தது. அந்தத் தொடரில் அணித்தலைவராக சோபெர்ஸ் சிறப்பாகச் செயற்பட, அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒரு தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணி முதன்முதலாகக் கைப்பற்றிக்கொண்டது. அதற்கடுத்தவருடம் இங்கிலாந்துக்கு அணியைத்தலைமையேற்று வழிநடத்திச்சென்ற சோபெர்ஸ், உலகின் முதற்தரத் துடுப்பாட்டவீரராகத் தன்னை இன்னொருமுறை உறுதிசெய்துகொண்டார்.
(தீபம் கனடா-56)