மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-9

சேர். காரி சோபெர்ஸ் (Sir. Garfield Sobers)

காரி சோபெர்ஸ் ப்ரிட்ஜ்ரவுண், பார்படோசில் 1936 ஆடி மாதம் 28ம் திகதி பிறந்தார். ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாகப் பிறந்த சோபெர்சுக்கு அவரது இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் இருந்தன. அவ்விரு மேலதிக விரல்களையும் தனது குழந்தைப் பருவத்தில் தானாகவே அகற்றிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் இதற்கு முந்தைய அத்தியாயங்களிற் பார்த்த மற்றைய மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டச் சாதனையாளர்கள் போலவே, காரியும் தமது சிறுவயதிலிருந்தே துடுப்பாட்டம் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளிற் சிறந்தவராக இருந்தார். பாடசாலை அணி, கழக அணிகள் எனப்படிப்படியாக முன்னேறி, தமது பதினாறாவது வயதில் பார்படோஸ் பிராந்திய அணிக்காக முதற்தரப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருந்தார்.

காரி சோபெர்ஸ் தமது ஆரம்பகாலத்தில் ஓரளவு துடுப்பெடுத்தாடக்கூடிய பந்துவீச்சாளராகவே அடையாளங்காணப்பட்டார். இடது கைச் சுழற்பந்து வீச்சாளராகவும், மிதவேகத்திலும் பந்து வீசக்கூடியவராகவும் சேபெர்ஸ் செயற்பட்டார். 1953 இல் அறிமுகமான முதலாவது முதற்தரப்போட்டியில் ஏழு இலக்குகளைச் சாய்த்ததோடு, MCC அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் முறையே இரு ஆட்டவாய்ப்புகளில் 46 மற்றும் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்தச் சிறப்பான இரு ஆட்டங்கள் காரணமாக அவர் மேற்கிந்தியத்தீவுகளின் 5-நாட் போட்டிகள் விளையாடுகிற அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

sobers-1

இங்கிலாந்துக்கெதிரான முதற்போட்டியில் 4 இலக்குகளைச் சாய்த்திருந்தாலும், அந்தத் தொடரில் அவர் மிகச் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார் என்று சொல்லமுடியாது. இதே கூற்று அவரது முதல் 14 போட்டிகளுக்கும் பொருந்தும் எனலாம். அதுவரைக்குமான போட்டிகளில் சோபெர்ஸ் வெறும் மூன்று அரைச்சதங்களை மட்டுமே பெற்றிருந்தார். பந்துவீச்சில் அதிசிறந்த பெறுதியாக ஒரே ஒரு முறைமட்டும் 4 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். 1957 இல் இங்கிலாந்துக்குச் சென்று விளையாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியிலிடம்பெற்றிருந்த சோபெர்சுக்கு அதுவே இறுதித்தொடராக இருக்கும் என விமர்சகர்கள் மற்றும் நிர்வாகிகளில் ஒரு சாரார் பேசிக்கொண்டார்கள். அது ஓரளவுக்கு உண்மையாகும் வண்ணமே சேபெர்சின் துடுப்பாட்டமும் இருந்தது. இரண்டு அரைச் சதங்கள் அடங்கலாக 32 என்கிற சராசரியில் 320 ஓட்டங்களை மட்டுமே சோபெர்சால் பெற முடிந்தது. பந்து வீச்சிலும் 71  என்கிற சராசரியில் ஐந்து இலக்குகளையே அவரால் வீழ்த்த முடிந்தது. ஆனாலும், மேற்கிந்தியத்தீவுகளின் நிர்வாகிகளை சோபெர்சின் பக்கம் சாய்த்தது இந்தத் தொடரின் இறுதிப்போட்டி.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது போட்டி தொடங்கும்போது 2 போட்டிகளை வென்று, இரண்டு போட்டிகளைச் சமன்செய்திருந்த இங்கிலாந்து தொடரை ஏற்கனவே தன்வசமாக்கியிருந்தது. முதலிற் துடுப்பெடுத்தாடி 412 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் வெறும் 89 ஓட்டங்களுக்கு முதல் ஆட்டவாய்ப்பிலும், 86 ஓட்டங்களுக்கு இரண்டாவது ஆட்டவாய்ப்பிலும் சுருண்டார்கள். ஜிம் லேக்கர் மற்றும் ரொனி லொக் ஆகிய இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களை ஓரளவுக்காவது சரியாக எதிர்கொண்டது சோபெர்ஸ் மட்டுமே. முதல் ஆட்டவாய்ப்பில் 39 ஓட்டங்களையும், இரண்டாவது ஆட்டவாய்ப்பில் 42 ஓட்டங்களையும் பெற்ற சோபெர்ஸ், மற்றவர்களால் இயலாத ஆடுகளத்தில் தன்னாலும் ஆடமுடியும் என நிரூபித்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் நிர்வாகிகளின் நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொண்டார். அதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடவிருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்விடத்தில் சோபெர்சைப்பற்றிய சில வியத்தகு சம்பவங்களைப் பார்க்கலாம். மேலே பார்த்த இங்கிலாந்துக்கான தொடருக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணித் தெரிவுக்கான தகுதிகாண் போட்டிகளிற்தான் முதன்முதலாக சோபெர்ஸ் அணிக்குள்ளிருந்த அகமுரண்பாடுகளை முரண்கொண்டார். அந்த அணியில் இடம்பெறுவதற்குச் சமவாய்ப்புகளிருந்த வெஸ்லி ஹோல் மற்றும் ஃப்ராங் மேசன் ஆகிய இரு பந்துவீச்சாளர்களில் ஹோல் தமது நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சோபெர்ஸ் மற்றும் எவேர்ட்டன் வீக்ஸ் ஆகியோர் வேண்டுமென்றே தடுத்தாடினார்கள். மேசனை அடித்தாடினார்கள். சோபெர்சின் பார்வையில் மேலான பந்துவீச்சாளரான மேசனுக்குப் பதிலாக ஹோல் அணியிற் சேர்த்துக்கொள்ளப்பாட்டார். இந்த அகமுரண்கள்தான் மேற்கிந்தியத்தீவுகளின் வரமும் சாபமும். அவர்களின் பல அற்புதமான வெற்றிகளுக்கும், மோசமான தோல்விகளுக்கும் பின்னாலிருந்த ஒரு பெருங்காரணமும் இந்த அகமுரண்பாடுகள்தான்.

(தீபம் கனடா-54)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s