யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓரிரு குறிப்புகள்

(செப்பனிடப்பட்ட வடிவில் தாய்வீடு ஆவணி 2016 இல் வெளியான பத்தி. நன்றி: “தாய்வீடு” திலீப்குமார், கந்தசாமி கங்காதரன்)

தாய்நிலத்து அரசியல்பற்றி முடியுமானளவுக்கு எழுதுவதில்லை என்று நீண்ட நாட்களாக ஒதுங்கியிருந்திருக்கிறேன். காரணங்கள் பல. தாய்நிலம் நீங்கி  10க்கு மேற்பட்ட வருடங்கள் போயிற்று. நிரந்தரமாய்த் தாய்நிலம் திரும்பும் எண்ணமுமில்லை. எனவே, அங்கு வாழ்பவர்கள் நன்றே வாழ பேரிறையைப் பிரார்த்திப்பது மட்டுமே எனக்கிருக்கிற ஒரேயுரிமை. ஆயினும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதிக்கொண்டது, அதைத் தொடர்ந்த ஊடகப்பெருவெளி மோதல்கள் மனதை வலுவாகப் பாதிக்கின்றன. தலைவலிக்கிறது. ஆகவே பேசுவோம்.

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதிக்கொள்ளக் காரணமாயிருந்தது புதுமாணவர் வரவேற்பில் சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தைப் புகுத்த முயன்றதும், தமிழ் மாணவர்கள் அதற்கு வெளிக்காட்டிய எதிர்ப்பும் என்பதாகவே செய்திகள் சொல்கின்றன. எனக்கென்னவோ இது இந்த ஒரு சம்பவத்தின் விளைவெனப்படவில்லை. நீண்டநாளைய முறுகல் வெடித்திருக்கிறது. கலாச்சாரம் என்பதே காலத்துக்குக் காலம் அதிகாரமுள்ளவர்களால் தீர்மானிக்கப்படுவது என்கிறபோது, எந்தக் கலாச்சாரத்தைக் காப்பாற்ற அடித்துக்கொள்கிறோம் என்றகேள்வியும் இருக்கிறது. அதுபற்றி வேறு இடங்களில், வேறு தளங்களில் உரையாடலாம். இங்கேயெனது நோக்கமும் அதுவல்ல. நாம் உரையாடவேண்டியது, இச்சம்பவத்தின் பின்னாலெழுந்த உரையாடல்களைப்பற்றி. உரையாடல்களைப் பற்றிய உரையாடல் என்றுகூட இக்குறிப்புக்குத் தலைப்பிடலாம்.

என்னைப் பாதித்த முதல் உரையாடல் யதார்த்தனுடையது. யதார்த்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவின் இரண்டாமாண்டு மாணவர். இலக்கிய, சமூக, அரசியற் செயற்பாட்டாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர். கவித்துவமான மொழி அவருக்குக் கைவந்திருக்கிறது. அடக்குமுறைய ஆயுதத்தால் எதிர்கொள்ளவேண்டாம் என்று கோரிநிற்கும் யதார்த்தன் புன்னகைக்கத் தொடங்குவோம், அதையும் நாமே தொடங்குவோம் என்கிறார். மேலும் மாணவர்கள் பகடைக் காய்களாவது பற்றி, புலம்பெயர்ந்தோரின் போர் பற்றிய மோகம் பற்றியெல்லாம் சரியாகக் குறிப்பிடுகிறார். புலம்பெயர் பன்னாடைகள் பற்றிய இந்தத் தெளிவு ஒரு பெருவெளிச்சம். புலம்பெயர்ந்த எங்களுக்குத் தாய்நிலத்துச் சோகம் பிறந்தநாட் கொண்டாட்டங்களின் ஆண்களின் மதுவுக்கான ஊறுகாய் அல்லது கடனில்லாமல் வீடு வாங்கும் உத்தி அல்லது பெரும் அங்காடிகள்/உணவுச்சாலைகள் அமைப்பதற்கான முதலீடு. இலங்கையில் இருக்கிற இளந்தலைமுறை துப்பாக்கியைத் தூக்கினாற்தான் இதெல்லாம் இவர்களுக்குச் சாத்தியம். இந்த மனநிலையை யதார்த்தன் போன்றோர் (அவர்கள் சிறுபான்மை எனினும்) உணர்ந்திருப்பதும், இன்றைய களநிலைக்கு ஏற்றபடி என்ன செய்யலாம் எனச் சிந்திப்பதும் தருகிற நம்பிக்கைக்கு ஈடு இணையில்லை. ஆனால், அந்தக் குறிப்புக்குப் பின்னரான காலங்களில் யதார்த்தனும் அவரது நண்பர்களும் பகிர்கிற குறிப்புகள் அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தை அசைத்துப்பார்க்கின்றன.

உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வதானால், கிரிஷாந்த் எழுதிய “ பல்கலைக்கழக முரண்பாடு- பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு எடுக்கவேண்டும்” என்கிற கட்டுரையைக் குறிப்பிடலாம். கிரிஷாந்த் மட்டுமல்ல, தாய்நிலம்வாழ் தமிழர்கள் “ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமத்துவமாக வாழ்வது” என்கிற முடிவை எடுப்பார்களானால், அவர்களைக் கேள்வி கேட்கும் உரிமை யாருக்குமில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இந்தப் பன்மைத்துவ அரசியற்தன்மையின் இருத்தலை ஒப்புக்கொள்ளாமல் எவ்வகையான விடுதலைக் கருத்தியலையும் எம்மால் முன்னகர்த்த முடியாது. என்னால் “ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தீர்வு” என்ற கருத்தியலை ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும், கிரிஷாந்தின் அரசியற்தேர்வுக்கான உரிமையை மறுதலிக்கும் அயோக்கியத்தனத்தைச் செய்யமாட்டேன். ஆனாலும், தன்னரசியலை முன்னகர்த்த கிரிஷாந்த் செய்கிற அயோக்கியத்தனத்தைச் சுட்டவேண்டியிருக்கிறது. அவரது கட்டுரையில், “ஒரு வரலாற்று விளக்கம்” என்கிறதலைப்பின்கீழ் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல் கொடும் நஞ்சை ஏற்றியிருக்கிறார்.

இது ஒரு பல்லின மக்கள் வாழும் சமூகமல்ல. சிறிய வயதிலிருந்தே தமிழர்களை மட்டுமே அதிகம் பார்த்து வளர்ந்த சமூகம். சிங்களவர்களின் பண்பாட்டையோ அல்லது இஸ்லாமிய முறைகளையோ இவ்வளவு ஏன் சைவ மாணவர்கள் பலருக்கு கிறிஸ்தவ வழிபாட்டிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாது. நாம்தான் இதற்குப் பொறுப்பு முப்பது வருடகாலம் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி அனைவரின் பிரதேசங்களுக்கும் இடையில் சுவர்களை எழுப்பி பக்கத்தில் என்ன நடக்கிறதென்று தெரியாமல் செய்து விட்டோம். கிழக்கில் முஸ்லிம் சுவர் வடக்கில் தமிழ்ச்சுவர் மலையகத்தில் இந்தியத்தமிழ்ச்சுவர் தெற்கில் சிங்களச் சுவர் என்று இருந்ததை நாம் மறுக்க முடியாது. இதனால் ஒரு நாட்டிற்குள் பல்வேறு சமூகங்கள் வாழ்ந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாத ஒரு இளைய தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆம், கிரிஷாந்த். நீங்கள் சொல்கிற சுவர்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அச்சுவர்களை எழுப்பியது இலங்கையின் இனங்களுக்கிடையே இருந்த முரண்பாடுகளும் அதன்பேரான கொடும் வன்முறைகளுமேயொழிய, அந்த முரண்பாடுகளின் பக்கவிளைவாகத் தோன்றிய “விடுதலைப் போராட்டம்” அல்ல. இந்தச் சுவர்களுக்கு இலங்கையில் இருக்கிற அத்தனை இன மக்களும் பொறுப்புக்கூறவேண்டும். பெரும்பான்மை மக்கள்கூட்டமான சிங்களவர்களுக்குப் பெரும் பொறுப்புண்டு. நாசூக்காக தமிழ்த்தரப்பின்மேல்மட்டும் பழியைப் போடுகிற உங்களுக்கும், சிங்கள இனவாத சக்திகளின் பிரச்சாரங்களுக்கும் ஏதேனும் வித்தியாசமிருக்கிறதா கிரிஷாந்த்?

கிரிஷாந்த் இன்னொரு குறிப்பையும் பகிர்ந்திருந்தார். அதை எழுதியவர் நிரூஜன் என்பவர். அது பின்வருமாறிருந்தது.

தமிழ் மாணவர்களை தாக்குவதாய் இருந்தால் எமது பிணத்தை கடந்தே செல்ல வேண்டும்– சிங்கள மாணர்கள் 1983 ஜூலைக் கலவரத்தின்போது, சிங்கள மாணவர்கள் ஒன்றுகூடி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்கள் அனைவரையும் கொண்டுவந்து அக்பர் விடுதியில் சேர்த்தனர். மண்டபத்தைச் சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைத்தனர். வீதித் தடைகளை போட்டனர். “இவர்கள் அத்தனைபேரும் எங்கள் உடன்பிறப்புக்கள். எங்கள் உயிர்களைக் காப்பதுபோல இவர்களையும் பாதுகாப்போம். இவர்களை நீங்கள் நெருங்கவேண்டுமெனில் அது எங்கள் பிணங்களின் மேலால் சென்றால்தான் முடியும்” என்று தமிழர்களைத் தாக்க அலைந்துகொண்டிருந்த சிங்கள இனவாதிகளை நோக்கி சிங்கள மாணவர்கள் கூறினர். அவ்வறுதான் சிங்கள மாணவர்கள் அன்று தம் சகோதர தமிழ் மாணவர்களைக் காப்பாற்றினார்கள். யாழ் பல்கலைக் கழகத்து சகோதரர்களே நீங்கள் படிக்கும் வரலாறுகளோடு சேர்த்து இந்த வரலாற்றையும் படியுங்கள்.

நிரூஜனும், கிரிஷாந்தும் பரிந்துரைத்தபடி வரலாற்றைப் படிக்கலாம்தான். ஆனால் கொடுமை, அவர்கள் சொல்கிற ஒருபக்கம் மட்டுமே வரலாறில்லையே. புலிகள் அரச இயந்திரமான இராணுவத்தின்மீது தாக்குதல் தொடுக்க, அதற்குப் பதிலாக நிராயுதபாணிகளான மக்களைத் துரத்தித் துரத்தி அரசின் அனுசரணையோடு சிங்கள இனவாதிகள் கொன்றபோது, பெரும்பான்மைச் சிங்கள மக்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள் அல்லது கைதட்டிச் சிரித்தார்கள். இதுவும் வரலாறுதான். ஜேவிபி சார்புடைய மாணவர் இயக்கங்கள்தான் நிரூஜனும், கிரிஷாந்தும் சொல்கிறமாதிரிச் செயற்பட்டார்கள். ஏன்? ஜேவிபிக்கும் தமிழர்களுக்கும்கூட பொதுவானதும் பரிவானதுமான ஒரு வரலாறுண்டு. அது 1983 க்கு முன்னாலிருந்தே இருந்தது என்பதையும், அது என்ன வரலாறு என்பதையும் சிங்கள மாணவர்களே படியுங்கள் என்று சொல்ல இவர்களால் ஏன் முடிவதில்லை? கிரிஷாந்தோ, நிரூஜனோ இந்த ஜேவிபி-தமிழ் வரலாற்றைச் சொல்லி, “அட முட்டாள் தமிழ் மாணவர்களே, உங்கள் அம்மையும், அப்பனும், மாமனுஞ், சித்தியும் அப்படி இருந்தார்களடா. நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?” என்று கேட்டிருந்தால் அது அறத்தின்பாற்பட்டதாகவிருந்திருக்கும். சிங்களவர்களின் மத்தியில் மட்டுமல்ல நண்பர்களே, தமிழர் மத்தியிலும் இனவாதத்தைத் தவிர்த்த மானுடம் சார் கதைகள் நூற்றுக்கணக்கிலுண்டு.

இது எல்லாவற்றையும்விட அதிக சினமூட்டும் பகிர்வாகவிருந்தது, திசூரி வன்னியாராய்ச்சியின் பத்தியும், அதை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல், கேள்விகேட்காமல் பலர் பகிர்ந்ததும்தான். தன்னுடைய சிறப்புச் சலுகைகள் பற்றிய எல்லாவிதமான விழிப்புணர்வோடும், அச்சலுகைகளை நிராகரித்துத் தமிழ் மக்கள் மீதான அக்கறையில் எழுதுகிறேன், வன்முறைக்கெதிராக எழுதுகிறேன் பேர்வழி என்கிற பெயரில், அச்சலுகைகள்மூலம் கிடைத்த மேட்டிமைத்தனத்தோடு ஒரு கருத்தியல்வன்முறையை நிகழ்த்திப்போகிற அந்தப் பத்தியை, தமிழ்நாட்டு நாடகங்கள், விக்கிரமன் படங்கள் போன்றவற்றில் வரும் மிகையுணர்ச்சியோடு செய்யப்பட்ட ஒவ்வொரு பகிர்வும் கண்ணிற்பட்டபோதெல்லாம் நான் ஒரு ஒற்றைப்படையான தமிழ்த்தேசியவாதியாக உருமாறிக்கொண்டிருந்தேன். நேரடியாக ஓடிப்போய் நாம்தமிழ்ர் கட்சியில் இணைந்துவிடலாம் என்று மனம் பரபரத்துக்கொண்டிருந்தது. பெண்கள் வன்முறையைக் கையாளாமல் தங்களுக்கான உரிமைப்போராட்டத்தைக் கொண்டுநடத்துகிறார்கள் என்கிற ஒரேயொரு புள்ளியைத்தவிர மிகுதி எல்லாமும், கடைந்தெடுத்த கருத்தியல் வன்முறை.

திசூரி வன்முறையின் தொடக்கப்புள்ளியாக சொல்வதைப் பார்ப்போம்- 83 இல் நீங்கள் 12 இராணுவத்தினரைக் கொன்றது என்கிறார். அதற்குப்பதிலாகச் சிங்களவர்கள் தமிழர்களின் பெரும்பான்மையினரை இல்லாதொழித்தார்கள் என்கிறார். 83 க்கு முன்னரான வரலாற்றை, நிலவிய இனமுரண்பாட்டை, 83 க்கு முன்னர் சிறுபான்மை இனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை வசதியாக மறந்துவிடுகிறார். போகிற போக்கில் தமிழ் இளைஞர்கள் சிங்கள் இராணுவவீரர்களைத் தாக்கவில்லை திசூரி. அதற்கு முன்னும் ஒரு வரலாறுண்டு. எங்கள் இளைஞர்களும் யுவதிகளும் வன்முறையைத் தேர்ந்தெடுக்கவில்லை. வன்முறை அவர்கள்மீது திணிக்கப்பட்டது. அதற்குக்காரணமான அவரது சமூகத்தை சுயவிமர்சனம் செய்யக்கோராமல் வன்முறை பற்றி சிறுபான்மையினங்களுக்கு வகுப்பெடுப்பது, அவர் தனது சிறப்புச்சலுகைகளூடாக பெற்றுக்கொண்ட அதிமேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடே.

ஏன் தமிழர்கள் வன்முறையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதற்கு அவர் சொல்கிற காரணங்களைப் பார்க்கலாம்

  • தமிழர்கள் இலங்கை நாட்டின் அறிவுச் சொத்து.
  • இலங்கை நாட்டிற்குத் தமிழர்கள் தேவை.
  • இலங்கை நாட்டைக் கட்டியெழுப்பப் பெரும் அதிகாரம் கொண்ட பதவிகளில் தமிழர்கள் தேவை.

சத்தியமாக நான் என்னுடைய பின்புறத்தாற்தான் சிரித்தேன். சிறுபான்மைத் தமிழர்கள் நாட்டின் அதிகாரம்மிகுந்த பதவிகளில் இருந்தமையும், அந்த அதிகாரத்தினடிப்படையில் தோன்றிய முரண்பாடுகளுந்தான் இலங்கையை இப்படிச் சின்னாபின்னமாக்கிப் போட்டிருக்கின்றன என்பதை யாராவது அவருக்கு எடுத்துச்சொல்வார்கள் என்று பார்த்தால், அவர்கள் சோகமான பின்னணி இசையோடு திசூரியை ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆம், 1983 இன் four four bravo விற்கு முன்னாலும் இந்தத் தீவுக்கு வரலாறுண்டு.

துப்பாக்கிகளாலும், எறிகணைகளாலும், கிளஸ்ரர் குண்டுகளாலும், நச்சு வாயுவாலும் நிகழ்த்தப்படும் வன்முறையைச் சிறுபுன்னகையால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது. அவ்விதமான வன்முறையைக் கேள்வியெழுப்பிவிட்டுப், பிறகு எங்களுக்கு அறிவுரை சொல்லலாம். அந்த விசாரணையை மேதகு பிரிகேடியர் சுனில் வன்னியாராய்ச்சியிடமிருந்து திசூரி வன்னியாராய்ச்சி தொடங்குவார் என எதிர்பார்ப்போம். பிறகு பேசுவோம் வன்முறையற்ற தமிழ் எதிர்ப்பை.

இடைக்குறிப்பு: பெண்கள் மீதான வன்முறைகள், பெண்கள் அவ்வன்முறைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பான திசூரியின் கருத்துக்கள் ஏற்புடையவையே. மரியாதைக்குரியவைதாம். ஆனால் அதை அவர் இங்கே குறிப்பிட்டிருக்கத்தேவையில்லை என்றே நினைக்கிறேன். பெண்கள் மீதான வன்முறையில் இப்படி பேரழிவு ஆயுதங்கள் பாவிக்கப்படுவதில்லை, அதனால் பெண்களுக்கு வன்முறையற்ற போராட்டம் சாத்தியமாகிறது என்றுகொண்டு யாரும் வரவேண்டாம். வன்முறையென்பதை புலப்படும் வன்முறைகளோடு மட்டுமே பொருத்திப்பார்க்கிற மனநிலைச் சிக்கல் இது. பெண்கள் மீதான வன்முறையென்பது அடிப்பது உதைப்பது மட்டுமல்ல, வேசையென்றழைப்பது, உணர்வுரீதியாகக் காயப்படுத்துவது, பிரிந்த பெண் துணையோடான அந்தரங்கங்களைப் பற்றிப் பொதுவெளியில் கவிதை, நாடகம் வரைவது போன்றவை அடிப்பது உதைப்பதைவிட அயோக்கியத்தனம் மிகுந்த வன்முறையின் வடிவங்கள்.

இலங்கைச் சிங்களர்களாய், இலங்கைத் தமிழர்களாய், முஸ்லீம்களாய், பறங்கியராய், வேடுவராய் எனச் இலங்கையில் ஒன்றிணைவோம் என்று சொல்லாமல், “இலங்கையராய் ஒன்றிணைவோம்” என்கிற பெரும்பான்மை இனவாத வாசகத்தோடு கருத்தியல் வன்முறை நிகழ்த்தும் நீங்கள், உங்களுக்கு அளிக்கப்பட்ட எல்லாச் சலுகைகளையும் ஏற்றுக்கொண்ட பெரும் வன்முறையாளர்.

இச்சம்பவத்தின் பின்னான நாட்களில் வெளியான ப்ரசாத் அலுத்வத்தவின் ஓவியமும் சர்ச்சைக்குரியதாயே இருக்கிறது. அவ்வோவியத்தில் ஒரு சிங்கள ஆண், தமிழ்ப்பெண் சோடி சித்தரிக்கப்படுகிறது. இன நல்லிணக்கம் என்கிறார்கள் இந்த ஓவியத்தை. ஆண் அதிகாரத்தின் குறியீடு என்கிற கோணத்திலிருந்து பார்த்தால் ஒரு மோசமான ஓவியம் இது. கலப்புத்திருமணம் இனமுரண்பாடுகளை ஒழிக்கும் என்பது கலப்புத்திருமணம் சாதியை இல்லாதொழிக்கும் என்கிறமாதிரியான அபத்த நகைச்சுவையே. ஆனாலும், ஒரு கலைப்படைப்பை ஒவ்வொருவர் ஒவ்வொருமாதிரி வாசிக்கலாம் என்பதால், ப்ரசாத் அலுத்வத்தவின் ஓவியத்துக்கு அர்த்தம் கற்பிப்பது எவ்வளவுக்கு சரியானதாயிருக்கும் என்பது தெரியவில்லை.

இத்தனை சனங்களின் சாவுக்குப் பின்னரும் என் சகோதரத்தை, என் பிள்ளைகளை வன்முறை வழிக்கனுப்ப எனக்கு எந்தவிதமான நோக்கமுமில்லை. மேலும், இன முரண்பாடுகளை நல்லிணக்கத்தால் களைய, ஒடுக்கியவர்/வென்றவர் பக்கம் தான் முதலடி எடுத்துவைக்கவேண்டும். தமிழர்கள்தான் முஸ்லிம்களுக்கு நட்புக்கரம் நீட்டவேண்டும். சிங்களவர்கள்தான் தமிழர்களுக்கு நட்புக்கரம் நீட்டவேண்டும். தமிழர்கள் புன்னகைக்கத்தயாராயிருக்கிறோம். பள்ளிக்கூடக்காலத்தில் உடற்சோதனை என்கிற பெயரில் விதைகளையும், மார்புகளையும் அவர்கள் பிசைந்தபோது “விடுங்கோ சேர்” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு புன்னகைத்தோமே அதுபோல, எங்கள் குதங்களில் செருகப்பட்ட இரும்புக்கம்பிகளில் தூளின் காரம் குறைவாக இருந்தபோது புன்னகைத்தோமே அதுபோல, அதே குதங்களில் காலையில் இரத்தமின்றி மலம் வெளியேறினால் புன்னகைக்கிறோமே அது போல, பள்ளிக்கூடம் என்று தெரிந்தும் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் போடப்பட்ட குண்டின் பின்னான நாட்களில் அந்தப் பள்ளிக்கூடத்தில் அதிபராயிருந்த எங்களூர் மோகன் மாஸ்ரரின் புன்னகைபோல, புன்னகைகளை அள்ளித்தர நாங்கள் தயார். அவர்களையும் புன்னகைக்கச் சொல்லுங்கள். எகத்தாளமாய்ச் சிரிக்கவல்ல.

2 comments

  1. எனது குறிப்புப் பற்றிய உங்கள் உரையாடல் முக்கியமானதொன்றாகவே கருதுகிறேன். நீங்கள் குறிப்பிடுகின்ற ஒற்றைப் படையான வரலாற்றை முன்னிறுத்துவதான தோற்றப் பாட்டையும் , விடுதலைப் போராட்டத்தை இனச் சுவர்களுக்கான காரணியை முன்னிறுத்துவது போன்றதையும் எனது குறிப்புக்கள் கொண்டிருக்கின்றன. அவை தவறானவை என்று ஏற்றுக் கொள்கிறேன். அவற்றில் மாற்றங்கள் தேவை. அவை தொடர்பிலான உங்கள் கருத்துக்கள் எனக்கும் ஏற்புடையதே.

    நன்றி

    கிரிஷாந்த்

    Like

Leave a Reply