மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-12

1960 களின் ஆரம்பத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்குள்ளே அணித்தேர்வு பற்றிய சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின. வீக்ஸ், வொரெல், வோல்கொட் ஆகியோருடன் இப்போது சோபெர்சும் அருமையாக விளையாட ஆரம்பித்திருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிறப்பான வீரர்கள் அனைவருமே கறுப்பினத்தவராக இருந்தார்கள். இருந்தபோதும், அணித்தலைவர்கள் எப்போதுமே வெள்ளையினத்தவர்களாக இருந்தார்கள். இந்நிலமையினால் உருவான அதிருப்தி 1950 களிலிலேயே வெளிப்பட ஆரம்பித்தது. கறுப்பினத்தவர்களான லாரி கொன்ஸ்ரன்ரீன் மற்றும் ஜோர்ஜ் ஹெட்லி ஆகியோர் முறையே 1937-38 மற்றும் 1947-48 இல் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிகளிற் தற்காலிகத் தலைவர்களாகக் கடமையாற்றியிருந்தார்கள். அணியின் நிரந்தரத் தலைவராகக் கறுப்பினத்தவர் ஒருவரே இருக்கவேண்டும் என்கிற கோரிக்கை 50 களின் பிற்பகுதியில் மிகவும் வலுப்பெற்றது. இறுதியில் அணிநிர்வாகம் இக்கோரிக்கைக்குச் செவிசாய்த்தது. 1960-61 இல் அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு ஃப்ராங் வொரெல் தலைவராக நியமனஞ் செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் சமபலம் பொருந்திய இரு அணிகளாகவிருந்த அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத்தீவுகளும் விளையாடிய இந்தத் தொடர் துடுப்பாட்ட வரலாற்றில் மிகப்பிரசித்தமானது.

அந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவின் தலைவராகவிருந்த ரிச்சி பெனோவும் சரி ஃப்ராங் வொரெலும் சரி துடுப்பாட்டப் போட்டிகளை கனவான் தன்மையோடும் ரசிகர்களின் மனங்கவர்ந்த வகையிலும் ஆடவேண்டும் என நினைப்பவர்கள். போடிகளை வெற்றி தோல்வியின்றி முடிக்காமல் வெற்றி அல்லது தோல்வி என்கிற வகையில் போராட்ட குணத்துடன் விளையாடத் தமது அணிகளை ஊக்குவிப்பவர்கள். இதன்காரணமாக ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் மிக விறுவிறுப்பானதொன்றாக அமைந்தது.

ப்றிஸ்பேனில் நடைபெற்ற முதற்போட்டி, மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்தப்போட்டி சமநிலையில் (tie) முடிந்த முதலாவது துடுப்பாட்டப்போட்டி. முதலில் ஆடியா மேற்கிந்தியத்தீவுகள் அணி சோபெர்சின் 132 அருமையான ஓட்டங்களின் துணையோடு 453 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 505 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இரண்டாவது ஆட்டவாய்ப்பில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் 284 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, வெற்றி பெறுவதற்கு 233 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடத்தொடங்கிய அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 6 இலக்குகளை இழந்து 92 ஓட்டங்கள் என்ற நிலையிற் தோல்வியை நோக்கிச் சரிந்துகொண்டிருந்தது. 7 வது இணைப்பாட்டமாக அணித்தலைவர் பெனோவும், அவரது நெருங்கிய தோழரான அலன் டேவிற்சனும் சேர்ந்து 134 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலியாவை வெற்றியின் விளிம்புக்குக் கொண்டுவந்தனர். பெனோ வெஸ் ஹோலின் பந்துவீச்சில் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 80 ஓட்டங்களைப் பெற்ற டேவிற்சன் run-out  முறையில் ஆட்டமிழந்தார். மேலும் இரு வீரர்கள் run-out முறையில் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலியா தனது அனைத்து இலக்குகளையும் 232 ஓட்டங்களுக்கு இழக்க, மிகவும் விறுவிறுப்பான, 5-நாட் போட்டிகளின் முதலாவது சமநிலையில் முடிந்த போட்டி முடிவுக்கு வந்தது. அவுஸ்திரேலியாவின் டேவிற்சன் 124 ஓட்டங்களைப் பெற்றதோடல்லாமல் (44 & 80) 11 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்.

 

 

Leave a Reply