இரு பத்தாண்டுகளுக்கு முன்னால்
எம் காப்பர்கள் எங்கோ போயிருந்த பகலொன்றில்
அரசியாரனுப்பிய மீட்பர்கள் வருகிறார்களென்று
பள்ளிவிட்டனுப்பினார்கள்.
மீட்பர்களைக்கண்டு ஏனஞ்சினார்கள்?
++++
பற்றைக் காடுகளுக்குள்ளாலும்
வெட்டிய வேலிகளுக்குள்ளாலும்
புதிதாகப் பாதை சமைத்து
மீட்பர்கள் வந்தார்கள்.
ஒவ்வொரு கையிலும்
குருதி சொட்டும் செந்தாமரைப் பூ
++++
பள்ளிக்கூடத்து மேடையொன்றில்
ரத்தினவிஜயமீட்பர் ஓர் நாள் எமைக் கேட்டார்,
மக்காள், இதன் பெயர் என்ன தெரியுமா?
குருதியில் தோய்ந்த செந்தாமரைப் பூவென்றோம்
இல்லை மக்காள், சரியாய்ப் பாருங்கள்,
இதுவொரு வெண்டாமரை.
இல்லையே மீட்பர், இது குருதியிற் தோய்ந்த செந்தா…
அட நாய்களே.. இது ஒரு வெண்டாமரை.
ஆம் மீட்பர், இதொரு வெண்டாமரையேதான்.
ரத்தினவிஜயமீட்பர் மகிழ்ந்திருந்தார்
++++
செம்மண் காணியை உழுத ஒருவன்
அவன் பெற்றது
அவனைப் பெற்றது
எல்லாம் எலும்பாய் செம்மண்ணில் கண்டான்
மீட்பரே என்ன இதுவென்றான்?
அரசியாரின் ஆணைக்கிணங்க
உன் மண்ணைச் செம்மண்ணாக்கினோம் என்றார் மீட்பர்.
இச்செம்மண் நல்லதில்லையே மீட்பர் என்றான் இவன்
ஆம், இது இன்னும் சிவக்கவேண்டும் என்றார் மீட்பர்
இல்லை மீட்பர், இம்மண்ணே உகந்தது
மீட்பர் சிரித்தார்.
++++
அரசி போனார்
மன்னர் வந்தார்
காப்பர்கள் முற்றாயில்லாது போயினர்
மன்னரும் போனார்
++++
இருபத்தாண்டுகள் கடந்து
செம்மண் நல்கிய வெண்டாமரைச் செல்விக்கு நன்றி சொல்லி
நாங்கள் பொங்கலிட்டோம்
++++
தை 15, 2016