ஃப்ராங் வொரெல் (Sir. Frank Worrell)
1948 இல் இங்கிலாந்துக்கெதிரான தொடரில் அறிமுகமாகிய மூன்று “W” க்களில் மூன்றாமவரும், சமமானவர்களின் முதன்மையானவரும் என்றால் சேர். ஃப்ராங் வொரெல் அவர்களைக் குறிப்பிடலாம். அறிமுகமான முதற் போட்டியின் முதல் ஆட்டவாய்ப்பிலேயே 97 ஓட்டங்களைக் குவித்துத் தன்னை நிரூபணம் செய்துகொண்ட வொரெல், மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வரலாற்றின் மிகமுக்கியமான ஒரு ஆளுமையென்றால் மிகையாகாது.
ஃப்ராங் வொரெல், வோல்கொட் மற்றும் வீக்ஸ் போலவே பார்படோசில் பிறந்தவர். சிறுவயது முதலே துடுப்பாட்டப்போட்டிகளில் ஈடுபாடு காட்டிவந்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பிக்கும் முன்னரே, உள்ளூர் முதற்தரப் போட்டிகளில் இரண்டுமுறை 500 ஓட்டங்களுக்கு மேலான இணைப்பாட்டங்களைப் பெற்றுக்கொண்ட முதலாமவர் என்கிற சாதனைக்கு உரித்துடையவர். (1943-44 இல் ஜோன் கொடார்ட்டுடன் சேர்ந்து 502 ஓட்டங்கள், 1945-46 இல் வோல்கொட்டுடன் சேர்ந்து 574 ஓட்டங்கள்). 1948 இல் இங்கிலாந்துக்கெதிரான முதலாவது 5-நாட் போட்டியில் அறிமுகமான முதற்போட்டியில் 97 ஓட்டங்களைப் பெற்று சதத்தினைத் தவறவிட்டாலும், அதற்கடுத்த போட்டியில் 131 ஓட்டங்களை ஆட்டமிழக்காமற் பெற்றார். 1950 இல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக நொற்றிங்காம் மைதானத்தில் 261 ஓட்டங்களையும், லண்டன் ஓவல் மைதானத்தில் 138 ஓட்டங்களையும் பெற்றார். 539 ஓட்டங்களை இந்தத் தொடரில் குவித்து, மேற்கிந்தியத்தீவுகள் 3-1 என்ற கணக்கில் தொடரை வெற்றிகொள்ள வழிசமைத்தார்.
தொடர்ச்சியாக எல்லா அணிகளுக்கும் எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார் வொரெல். கிங்க்ஸ்ரனில் இந்தியாவுக்கெதிராய் 237 (1953), இங்கிலாந்துக்கெதிராய் போர்ட்-ஒஃப்-ஸ்பெயினில் 167 (1954), நொட்டிங்காமில் ஆட்டமிழக்காமல் 191 (1957), ப்றிட்ஜ்ரவுணில் ஆட்டமிழக்காமல் 197 (1960) ஆகிய சதங்களைக் குறிப்பிடலாம். துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், ஒரு பகுதிநேரப் பந்து வீச்சாளராகவும் செயற்பட்ட வொரெல், இங்கிலாந்துக்கெதிராக 1957 ஆம் வருடம் ஒரு முறை ஏழு இலக்குகளைச் சாய்த்துமிருக்கிறார். இவ்வாறாக சிறந்ததொரு துடுப்பாட்டவீரராகாவும், பகுதிநேரப் பந்துவீச்சாளராகவும் இருந்த வொரெல் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வராலாற்றில் முக்கியமானவராகக் கருதப்படுவது இன்னொரு காரணத்துக்காக.
ஃப்ராங் வொரெல்தான் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முதலாவது கறுப்பினத் தலைவர். 1960-61 இல் அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட வொரெல், அவுஸ்திரேலியாவின் தலைவர் ரிச்சி பெனோவுடன் சேர்ந்து அந்தத் தொடரை இரசிகர்களின் மனம்நிறைந்த தொடராக ஆக்கினார். இரு தலைவர்களும் வெற்றியை நோக்கி, ஆனால் விதிகளுக்குட்பட ஆடுவதற்குத் தமது வீரர்களைப் பணித்தார்கள். இந்தத் தொடரிற்றான் 5-நாட் போட்டிகளின் வரலாற்றின் சமநிலையில் (Tie) முடிந்த முதற்போட்டி இடம்பெற்றது. மேற்கிந்தியத்தீவுகள் 2-1 என்ற வகையில் தொடரைத் தோற்றிருந்தாலும், அவுஸ்திரேலிய மக்கள் வீதியோரங்களில் திரண்டு நின்று அவர்களை வழியனுப்பியது, அவர்களின் விளையாட்டின் கனவான் தன்மையையும், கவர்ச்சியையும் பறைசாற்றிய நிகழ்வாகும்.
வொரெல் ஒரு கனவான் துடுப்பாட்டவீரர் மட்டுமல்ல, அரசியல்ரீதியான பிரக்ஞையும், விதிகளைப் பேணுகிற தன்மையும், கட்டுக்கோப்பான அணித்தலமைத்துவப் பண்பும், மனிதாபிமானமும் மிக்கவர். அவர் அணித்தலைவராகமுன்னர் ஜமேய்க்கர்களாகவும், பார்படியர்களாகவும், ட்ரினிடாடியர்களாகவும் பிரிந்துகிடந்த அணிவீரர்கள், அவரின் கீழ் “மேற்கிந்தியத்தீவுகள்” அணியாகினர். நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளல், ஆட்டமிழந்துவிட்டோமென்று தெரிந்தால் தாமாக வெளியேறுதல், சகவீரர்களையும், எதிராளிகளையும் மதித்தல் ஆகியவ நற்பண்புகளைத் தனது அணிவீரர்களிடம் நிலைபெறச் செய்தார். பிரபலமான வீரரான காரி சோபர்ஸ் ஒரு போட்டியில் நடுவரின் தீர்ப்பை மதிக்காமையைச் சுட்டிக்காட்டி அவரைத் திருத்தினார். சார்ளி க்ரிஃபித்தின் எகிறுபந்தால் தலையில் காயமடைந்த இந்திய அணித்தலைவர் நாரி கொண்ட்ராக்ரருக்குக் கொடுக்கப்பட்ட முதற்துளி இரத்தம் வொரெலுடையது.
வெளிப்படையாக அரசியல் பேசிய வொரெல் அதன்காரணமாகச் சில பகைகளைச் சேர்த்துக்கொண்டாலும், எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்டார். 1963 இல் இங்கிலாந்தை இங்கிலாந்தில் வைத்து 3-1 என்ற கணக்கில் தோற்கடித்த பின்னர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். 51 போட்டிகளில், 9 சதங்களடங்கலாக 49.48 என்கிற சராசரியோடு 3860 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வொரெல், 69 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார். 1967 ம் வருடம், இரத்தப் புற்றுநோய் காரணமாக உயிர்நீத்த வொரெல் அவர்கள் 1964 ல் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார். இன்றும் அவுஸ்திரேலியா-மேற்கிந்தியத்தீவுகள் 5-நாட் போட்டித்தொடர்கள் சேர்.ஃப்ராங் வொரெல் ஞாபகார்த்தக் கோப்பை என்றே அழைக்கப்படுகின்றன. அவரது சடுதியான மரணம் துடுப்பாட்ட உலகுக்கு மட்டுமல்ல, கரீபியன் தீவுகளுக்கே ஒரு பேரிழப்பாக அமைந்தது.
(தீபம் கனடா-48)