சேர். காரி சோபெர்ஸ் (Sir. Garfield Sobers)–தொடர்ச்சி
1966 இல் இங்கிலாந்துக்கெதிராக மேற்கிந்தியத்தீவுகள் அணியைத் தலைமையேற்று வழிநடத்திச்சென்ற சோபெர்ஸ் அந்தத் தொடரில் ஒரு சகலதுறை ஆட்டவீரராகச் சிறப்பாகச் செயற்பட்டார். அந்தத் தொடரில் மூன்று சதங்கள் இரண்டு அரைச் சதங்கள் அடங்கலாக 103.14 என்கிற சராசரியுடன் 722 ஓட்டங்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல், 20 இலக்குகளை வீழ்த்தியும், 10 பிடிகளையும் எடுத்து மேற்கிந்தியத்தீவுகள் அணி 3-1 என்கிற ரீதியில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை வெற்றிகொள்ள வழிவகுத்தார்.
அந்தத் தொடருக்குப் பின்னர் வந்தபோட்டிகளில் சோபெர்ஸ் சிறப்பாக விளையாடியபோதும், அணித்தலைவராக மிகச்சிறப்பாகச் செயற்பட்டார் என்று சொல்லமுடியாது. 1966-67 இல் இந்தியாவை இந்தியாவில் வைத்து 2-0 என்கிற ரீதியில் வெற்றிகொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அடுத்த தொடர்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. இந்தியா, இங்கிலாந்து அணிகளிடம் சொந்த மண்ணிலும், அவுஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் தொடர்களை மேற்கிந்தியத்தீவுகள் அணி சோபெர்சின் தலைமையில் தோற்றுப்போனது. நியூசிலாந்தோடு சொந்த மண்ணிலும், நியூசிலாந்திலும் நடந்த தொடர்கள் வெற்றிதோல்வியின்றி முடிய, சோபெர்சுக்குப் பதிலாக ரோகான் கன்ஹாய் (Rohan Kanhai) அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
சோபெர்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக மட்டுமில்லாமல் இங்கிலாந்தின் கழகங்களுக்கும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கும் விளையாடி அந்தப் போட்டிகளிலும் மிகத்திறமையாகச் செயற்பட்டிருந்தார். 1970 களில் இனவொடுக்குமுறை காரணமாகத் தென்னாபிரிக்க அணியோடு ஏனைய நாடுகள் விளையாட்டு உறவுகளை முறித்துக்கொண்டன. தென்னாபிரிக்கா இங்கிலாந்தில் விளையாடவேண்டிய தொடருக்குப் பதிலாக உலக XI அணியொன்று இங்கிலாந்துக்குச் சென்று விளையாடியது. அந்தத் தொடரில் உலக அணிக்குத் தலைவராயிருந்த சோபெர்ஸ் முதற்போட்டியின் முதல் ஆட்டவாய்ப்பில் வேகமாகப் பந்துவீசி 6 இலக்குகளை வீழ்த்தினார். துடுப்பெடுத்தாடி 183 ஓட்டங்களைப் பெற்றார். இரண்டாவது ஆட்டவாய்ப்பில் சுழற்பந்து வீச்சின்மூலம் இங்கிலாந்து அணியைச் சுருட்டினார். இதுதான் சோபெர்ஸ்.
அவுஸ்திரேலியாவில் கெரி பாக்கர் (Kerry Packer) தொடரின்போதும் உலக அணிக்காக சோபெர்ஸ் விளையாடியிருந்தார். இந்தப் போட்டியொன்றில் நடந்த சுவையான சம்பவம் சோபெர்சின் திறமைக்கு இன்னுமொரு சான்றாகும். அந்தக் காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி (Dennis Lillie) ஒரு பயமுறுத்தும் அதிவேகப் பந்துவீச்சாளராகவிருந்தார். லில்லியின் எகிறு பந்துகளை எதிர்கொண்ட மிகவும் தட்டுத்தடுமாறிய சோபெர்ஸ் அவரது பந்திலேயே ஆட்டமிழந்தார். உடனே லில்லி சோபெர்சைப் பார்த்து “உங்களுக்கு வயதாகிவிட்டது” என்கிற வகையில் ஏதோ சொல்ல, “இளைஞனே, அதை நீ துடுப்பெடுத்தாடும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று சொன்ன சோபெர்ஸ் லில்லி துடுப்பெடுத்தாடும்போது தானும் எகிறுபந்துகளை வீசி லில்லியைத் தடுமாற வைத்தார். அதற்கடுத்த ஆட்டவாய்ப்பில் லில்லி திரும்பவும் எகிறு பந்துகளை வீசி சோபெர்சைத் தடுமாற வைக்க முயன்றார். இந்தமுறை சோபெர்ஸ் எந்தத் தடுமாற்றமுமில்லாமல் லில்லியின் பந்துகளை அடித்தாட ஆரம்பித்தார். அந்தப் போட்டியில் 326 பந்துகளில் அவர் பெற்ற 254 ஓட்டங்களை அவுஸ்திரேலிய மண்ணிற் தான் பார்த்த மிகச்சிறந்த ஆட்டம் என டொன் ப்ராட்மன் பாராட்டினார்.
இது போலவே, 1968 இல் இங்கிலாந்தின் நொட்டிங்காம்சயர் அணிக்காக விளையாடிய சோபெர்ஸ், மல்கம் நாஷ் என்கிற பந்துவீச்சாளரின் ஒரு பந்துப்பரிமாற்றத்தின் 6 பந்துகளையும் ஆறு ஓட்டங்களுக்கு அடித்தார். முதற்தரப்போட்டிகளில் இந்தச் சாதனை அதற்கு முன்னர் எவராலும் நிகழ்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சோபெர்சிற்குப் பிறகு 1985 இல் ரவி சாஸ்திரி (மும்பை எதிர் பரோடா), 2007 இல் யுவராஜ் சிங் (இந்தியா எதிர் இங்கிலாது, 20-20 போட்டி), ஹேர்ஷல் கிப்ஸ் (தென்னாபிரிக்கா எதிர் நெதர்லாந்து, 1-நாட் போட்டி) ஆகியோர் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
1974 இல் இங்கிலாந்து அணிக்கெதிராகத் தனது இறுதிப்போட்டியை விளையாடினார். 93 போட்டிகளில், 26 சதங்கள் 30 அரைச்சதங்கள் அடங்கலாக 8032 ஓட்டங்களையும் (சராசரி 57.78), 6 ஐந்து இலக்குப் பெறுதிகள் உட்பட 235 இலக்குகளையும், 109 பிடிகளையும் 5-நாட் போட்டிகளில் சோபெர்ஸ் பெற்றுக்கொண்டார். முதற்தரப்போட்டிகளில் 28314 ஓட்டங்களையும் (86 சதங்கள்), 1043 இலக்குகளையும், 407 பிடிகளையும் பெற்றுக்கொண்ட சோபெர்ஸ் ஒப்பாரும் மிக்காருமில்லாத (ஜக் கல்லிஸ் ஒப்பார் எனலாம்) ஒரு சகலதுறை ஆட்டவீரர் என்றால் மிகையன்று.
(தீபம் கனடா-58)